சிறையிலிருந்து விடுதலையான இந்தியருக்கு சொந்த கிராமத்தில் உற்சாக வரவேற்பு!

நாட்டிற்காக தியாகம் செய்வதிலிருந்து இளைஞர்கள் பின்வாங்க கூடாது என பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலையான குல்தீப் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜம்முகாஷ்மீர் மாநிலம் கதுவா கிராமத்தைச் சேர்ந்த குல்தீப் சிங், கடந்த 29 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

1992 ஆம் ஆண்டு இந்திய எல்லைப் பகுதியில் பணி செய்து கொண்டிருந்தபோது வழி தவறி பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்ட அவரை அந்நாட்டு ராணுவத்தினர் கைது செய்தனர்.

இந்தியாவிற்காக உளவு பார்க்க வந்துள்ளதாக குற்றம் சாட்டி, குல்தீப் சிங்கிற்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. மூன்று ஆண்டுகள் சித்தரவதை செய்த பாகிஸ்தான் உளவு அமைப்பினர் பின்னர் சிறையில் அடைத்ததாக குல்தீப் சிங் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர், ஜம்முகாஷ்மீரில் உள்ள தமது சொந்த கிராமத்திற்கு வந்தபோது அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

53 வயதான குல்தீப், இது தமக்கு இரண்டாவது பிறவி என்கிறார். பாகிஸ்தான் சிறையில் தண்டனை காலம் முடிந்தும் ஏராளமான இந்தியர்கள் அடைபட்டுள்ளதாகவும், அவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாட்டிற்காக தியாகம் செய்வதில் இருந்து ஜம்முகாஷ்மீர் இளைஞர்கள் ஒரு போதும் பின்வாங்க கூடாது என்றும் குல்தீப் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!