பஞ்சாப் நீதிமன்ற குண்டு வெடிப்பில் இறந்தது யார்? – காவல்துறை அதிகாரி தகவல்!

இந்த குண்டு வெடிப்பில் பாகிஸ்தானிய குழுக்களோ, காலிஸ்தானிய குழுக்களோ சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று எழுந்த சந்தேகம் இப்போது தீர்ந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் பயங்கர குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார், ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து நடைபெற்று வரும் விசாரணையில், அந்த குண்டு வெடிப்பில் இறந்தவரே நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

விசாரணை குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நீதிமன்ற குண்டுவெடிப்பில் இறந்தவர் ககன்தீப் சிங் என்ற முன்னாள் தலைமை காவலர் ஆவார். இவர் 2019-ம் ஆண்டு போதைப் பொருள் தடுப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் தான் வெளியில் வந்தார்.

குண்டு வெடிப்பு நடைபெற்ற இடத்தில் கிடைத்த சிம் கார்டு மூலம் இறந்துபோனது ககன்தீப் சிங் தான் என தெரிய வந்தது. இதனை அவரது குடும்பமும் உறுதி செய்தது. அவர் தான் குண்டு வைத்திருக்கக்கூடும் என தற்போது கிடைத்துள்ள ஆதாரங்கள் காட்டுகின்றன. இதுகுறித்த முழு உண்மை விரைவில் தெரிய வரும். இதனால் இந்த சம்பவத்தில் பாகிஸ்தானிய குழுக்களோ, காலிஸ்தானிய குழுக்களோ சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று எழுந்த சந்தேகம் இப்போது தீர்ந்துள்ளது.

இவ்வாறு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!