ஹெலிகாப்டர் விபத்து… 12 மணி நேரம் நீந்தி கரையேறிய மடகாஸ்கர் மந்திரி!

கப்பல் கவிழ்ந்த பகுதியில் மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக காவல்துறை மந்திரி செர்ஜ் கெல்லே சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.

ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் சுமார் 130 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல், நேற்று முன்தினம் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. கடலோர காவல் படையினர் உதவியுடன் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. 45 பேர் உயிருடன் மீட்கப்பட்டு கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். காணாமல் போன 20 பேரை மீட்புக் குழுவினர் தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, மீட்பு பணிகளை பார்வையிடுவதற்காக காவல்துறை மந்திரி செர்ஜ் கெல்லே ஹெலிகாப்டரில் சென்றார். அவருடன் பாதுகாப்புக்கு போலீசாரும் சென்றனர். ஆனால் இந்த ஹெலிகாப்டர் மீட்பு பணி நடைபெறும் பகுதியில் பறந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஹெலிகாப்டர் கடலில் விழுந்தது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஹெலிகாப்டர் விழுந்த இடத்தில் தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்றது.

இந்நிலையில், மந்திரி செர்ஜ் கெல்லே மற்றும் ஒரு காவலர் ஆகியோர் சுமார் 12 மணி நேரம் நீந்தி நேற்று காலை கடலோர நகரமான மஹம்போவில் தனித்தனியாக கரையேறினர். அப்போது அவர்கள் மிகவும் சோர்வாக காணப்பட்டனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் கடலில் விழுவதற்கு முன்பாக, இருவரும் வெளியே குதித்து உயிர்தப்பியதாக துறைமுக அதிகாரசபை தலைவர் தெரிவித்தார்.

ஹெலிகாப்டரில் பயணித்த மேலும் 2 பேரைக் காணவில்லை. அவர்களை தேடும் பணி நடைபெறுகிறது.

கரையேறிய மந்திரி செர்ஜ் கெல்லே, ஈசி சேரில் படுத்திருந்தபடி பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபற்றி காவல்துறை தலைவர் ரேவோவரி கூறுகையில், ‘காவல்துறை மந்திரி கெல்லே ஹெலிகாப்டரின் இருக்கையை மிதக்கும் சாதனமாக பயன்படுத்தி நீந்தி வந்துள்ளார். அவர் எப்போதும் விளையாட்டின்போது, நீண்டநேரம் தாக்குப்பிடிக்கும் ஸ்டமினா கொண்டவர். முப்பது வயது வாலிபரைப் போன்று இப்போதும் அதே உடற்திறனுடன் இருக்கிறார். அவர் எஃகு நரம்பு கொண்டவர்’ என்றார்.

30 ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றிய கெல்லே, கடந்த ஆகஸ்ட் மாதம் மந்திரிசபை மாற்றத்தின்போது, காவல்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!