மகிந்தவின் குடியுரிமையை பறிக்க கருத்து வாக்கெடுப்பும் அவசியம் – சரத் என் சில்வா…!


மகிந்த ராஜபக்சவின் குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மட்டும் போதாது, கருத்து வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற பாரிய மோசடிகள், ஊழல்கள், அதிகாரமீறல்கள் குறித்து விசாரித்த அதிபர் ஆணைக்குழு, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்குமாறும், அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவரது குடியியல் உரிமைகளைப் பறிக்குமாறும் பரிந்துரைத்துள்ளது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என்.சில்வா, “நாட்டின் குடிமகன் ஒருவரது குடியியல் உரிமைகளைப் பறிப்பதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.

அத்துடன் கருத்து வாக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும். குடியியல் உரிமைகளை இழப்பது என்பது, ஒருவர் தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமையை பறிப்பதாகும். ஆனால் அரசியலமைப்பில் ஒவ்வொருவரினதும் வாக்குரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,

எனவே, கருத்து வாக்கெடுப்பை நடத்தாமலோ, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறாமலோ ஒருவரின் குடியுரிமையைப் பறிப்பது சட்ட விரோதமானது.

அதேவேளை, பட்டலந்த சித்திரவதை முகாம் தொடர்பான விசாரணை அறிக்கையில் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையைப் பறிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

ஆனால், மகிந்த ராஜபக்ச அந்த அறிக்கையை வெளிப்படுத்தாமல் ரணில் விக்கிரமசிங்க, குடியுரிமை இழப்பில் இருந்து காப்பாற்றியிருந்தார்” என்றும் அவர் கூறியுள்ளார். – Source: puthinappalakai.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!