தனது தொகுதியில் உள்ள சாலையை ஹேமமாலினி கன்னத்துடன் ஒப்பிட்டு பேசிய சிவசேனா மந்திரியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
மராட்டிய மாநில குடிநீர் வினியோக துறை மந்திரியாக இருப்பவர் குலாப்ராவ் பாட்டீல். சிவசேனா கட்சியை சேர்ந்த இவர், ஜல்காவ் புறநகர் தொகுதி எம்.எல்.ஏ. ஆவார். இந்த நிலையில் இவர் தனது தொகுதியில் உள்ள சாலைகளை நடிகையும், பா.ஜனதா எம்.பி.யுமான ஹேமமாலினியின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் இவர் ஜல்காவ் மாவட்டம் போட்வாட் நகர் பகுதி பஞ்சாயத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், “எனது அரசியல் போட்டியாளர்கள் எனது தொகுதியின் சாலை தரத்தை பார்க்க வேண்டும். 30 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருப்பவர்கள் கூட எனது தொகுதிக்கு வந்து சாலையை பார்க்க வேண்டும். அவர்களுக்கு ஹேமமாலினியின் கன்னம் (அவர் தொகுதி சாலைகள்) பிடிக்கவில்லையென்றால் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன்” என்றார்.
பா.ஜனதாவில் விலகி சமீபத்தில் தேசியவாத காங்கிரசில் இணைந்த மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே, ஜல்காவில் நீண்ட காலம் எம்.எல்.ஏ.வாக இருந்து உள்ளார். இவரை குறிப்பிடும் வகையில் குலாப்ராவ் பாட்டீல் அப்படி பேசியதாக தெரிகிறது.
இந்தநிலையில் மாநில மகளிர் ஆணைய தலைவர் ரூபாலி சகான்கர் சிவசேனா மந்திரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். மேலும் மந்திரி குலாப்ராவ் பாட்டீல் அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவில்லை எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!