11 வயது மகனை வீட்டுக்கு அழைத்து செல்ல வந்த பிரபல நடிகைக்கு நடந்த சோகம்!

மெக்சிகோ நாட்டின் பிரபல நடிகையான டானியா மெண்டோசா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டில் பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அங்கு ஒரு நாளில் சராசரியாக 10 பெண்கள் கொலை செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனை தடுத்து நிறுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தி பெண்ணியவாதிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் அரசால் பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் அந்த நாட்டின் பிரபல நடிகையான டானியா மெண்டோசா மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 42 வயதான மெண்டோசா, 2005-ல் ‘லா மேரா ரெய்னா டெல் சுர்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். அது மட்டும் இன்றி சமீபத்திய ஆண்டுகளில் இவர் பாடகியாகவும் விளங்கி வந்தார்.

இந்த நிலையில் மெக்சிகோவின் மோரேலோஸ் குர்னவாகா நகரில் உள்ள கால்பந்தாட்ட பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த தனது 11 வயது மகனை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக மெண்டோசா, பயிற்சி மையத்துக்கு வெளியே காரில் காத்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் மெண்டோசாவை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர். இதில் அவர் காருக்குள்ளேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார். கொலைக்கான பின்னணி என்ன என்பது உடனடியாக தெரிய வராத நிலையில் இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!