தயிர் பாக்கெட் வாங்க ரெயிலை நிறுத்திவிட்டு சென்ற டிரைவர்..!

ரெயில் டிரைவர் திட்டமிடப்படாத ஒரு இடத்தில் ரெயிலை நிறுத்தி விட்டு, தயிர் பாக்கெட் வாங்கி வந்துள்ளார்.

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து தெற்கே கராச்சியை நோக்கி இண்டர்சிட்டி ரெயில் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த ரெயில் டிரைவர் எந்தவித அறிவிப்புமின்றி திட்டமிடப்படாத ஒரு இடத்தில் ரெயிலை நிறுத்தி விட்டு, தயிர் பாக்கெட் வாங்கி வந்துள்ளார். அவர் கானா ரெயில் நிலையம் அருகே ரெயிலை நிறுத்திவிட்டு தயிர் வாங்க சென்றுள்ளார். பின், அலட்சியமாக நடந்து வந்து மீண்டும் ரெயிலை இயக்கி உள்ளார்.

இந்த நிகழ்வை ரெயிலில் இருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இந்த பதிவை பலர் பார்த்து வருகின்றனர். மேலும் பலரால் இது பகிரப்பட்டும் வருகிறது.

பாகிஸ்தானை சேர்ந்த ரெயில் ஓட்டுநரை பற்றிய அந்த வீடியோ தான், சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

இந்த வீடியோவை பாகிஸ்தானின் ரெயில்வே துறை மந்திரி அசாம் கான் பார்த்துவிட்டு, அந்த ரெயில் டிரைவரின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்மூலம் அந்த டிரைவரின் வேலை பறிபோனது. அவருடன் சேர்த்து அந்த ரெயிலின் உதவியாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து ரெயில்வே மந்திரி கூறியதாவது:-

“நாட்டின் சொத்துக்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்த எவரையும் அனுமதிப்பதில்லை. இதற்கு முன் இப்படியொரு நிகழ்வு நடந்ததில்லை. இனி எதிர் காலத்தில் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.

ரெயில்களின் பாதுகாப்பு சம்பந்தபட்ட இந்த விஷயத்தில் இத்தனை அலட்சியமாக ஒருவர் நடந்து கொண்ட விதம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், பாகிஸ்தானில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது அரிதான விஷயம் அல்ல என்று கூறி அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளார்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!