ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் இருந்து ராணுவ துப்பாக்கிகள் மீட்பு!

குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விழுந்து கிடந்த ராணுவ துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. மேலும் விமானப்படை அதிகாரி நேற்று 2-வது நாளாக விசாரணை நடத்தினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி நஞ்சப்பசத்திரம் பகுதியில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய இந்த விபத்தில் அவர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதில் விமானி வருன் சிங் மட்டும் 80 சதவீத காயங்களுடன், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததால் மரங்களின் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. தலைமை தளபதி பயணம் செய்த ஹெலிகாப்டர் 16 ஆயிரம் அடி உயரம் வரை பறக்கும் சக்தி கொண்டது. தற்போது கடல் மட்டத்தில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் இந்த விபத்து நடைபெற்று உள்ளது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக விபத்து நடைபெற்ற இடத்தில் நவீன டிரோன் கேமரா பறக்கவிடப்பட்டு, ஹெலிகாப்டர் எவ்வளவு அடி உயரத்தில் பறந்த போது விபத்து ஏற்பட்டது, விபத்து நடைபெற்ற இடத்திற்கும் தரையிறங்க வேண்டிய இடத்திற்கும் இடையே உள்ள தூரம், ரெயில்வே தண்டவாளம் பகுதிக்கும், விபத்து நடைபெற்ற இடத்திற்கும் உள்ள தூரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இதில் அந்த ஹெலிகாப்டர் 750 மீட்டர் உயரத்தில் விபத்து நடைபெற்று இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

இதனிடையே மத்திய அரசு விமானப்படை ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங்கை விசாரணை அதிகாரியாக நியமித்தது. இவர் 2-வது நாளாக நேற்று ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் அதிகாரிகளுடன் ஆலோசித்து விசாரணையை மேற்கொண்டார். அவருடன் விமானப்படை துணை மார்ஷல் சஞ்சீவ் ராஜ் உடனிருந்தார். ரன்னிமேடு ரெயில் பாதை அருகே சுற்றுலா பயணி ஒருவர் ஹெலிகாப்டர் விபத்து ஏற்படுவதற்கு முன்பு கடும் பனிமூட்டத்தில் சென்ற போது வீடியோ எடுத்து உள்ளார். அந்த இடத்திற்கு விசாரணை அதிகாரி சென்று ஆய்வு செய்தார். அங்கு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததா, கடும் பனிமூட்டம் நடுவே சென்றது குறித்து விசாரணை நடத்தினார்.

2-வது நாளாக விமானப்படை சிறப்பு குழுவினர் நவீன கருவிகளுடன் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்துக்கு வருகை தந்தனர். அவர்கள் ஹெலிகாப்டர் விழுந்த இடம், மரங்கள் மீது மோதிய பகுதி, வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். டிரோன் கேமரா பறக்கவிட்டு ஆய்வு பணியை மேற்கொண்டனர். ஹெலிகாப்டரின் பின்னால் இருந்த வால் பகுதி உடைந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்தது. 15 அடி நீள வால் பகுதி எரியாமல் இருந்தது.

மேலும் ராணுவ வீரர்கள் கொண்டு வந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட துப்பாக்கிகள் மீட்கப்பட்டது. பிஸ்டல் மற்றும் அதனை லோடு செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்களை விமானப்படையினர் சேகரித்தனர். எரிபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் துப்பாக்கிகள் எரிந்த நிலையில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அதேபோல் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!