மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய ராணுவ ஹெலிகாப்டர் -7 பேர் உடல்கள் மீட்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இதுவரை உயிரிழந்த 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று இன்று பிற்பகலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் மையத்துக்கு புறப்பட்டு சென்றது.

அந்த ஹெலிகாப்டர் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதை மேலே பறந்து கொண்டு இருந்த போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் ராணுவ ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியது.

ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்து கீழே விழுந்துள்ளது. ஹெலிகாப்டரில் ராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்பட 14 பேர் பயணம் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் மீட்புப்படையினர் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர்.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத்தும் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் பயணம் செய்தததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இடத்தில் மீட்கப்பட்ட ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் காயமடைந்தோருக்கு சிகிச்சை தர சிறப்புக்குழு நீலகிரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உடல்கள் தீயில் கருகியுள்ளதால் இறந்தது யார்? யார்? என அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!