பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் அர்ஜூனுக்கு இறுதி தீர்ப்பு..!

நடிகை சுருதி ஹரிகரண் தொடர்ந்த பாலியல் வழக்கில் நடிகர் அர்ஜூன் குற்றமற்றவர் என்று கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அர்ஜூன் மீது பாலியல் வழக்கு

தமிழ், கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் அர்ஜூன். இவர், கன்னடத்தில் வெளியாகி இருந்த விஸ்மயா (தமிழில் நிபுணன்) என்ற படத்தில் நடிகை சுருதி ஹரிகரணுடன் சேர்ந்து நடித்திருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு நடிகர் அர்ஜூன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி பெங்களூரு கப்பன் பார்க் போலீஸ் நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடிகை சுருதி ஹரிகரண் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் பேரில் நடிகர் அர்ஜூன் மீது கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகை சுருதி ஹரிகரண் தன் மீது பொய் குற்றச்சாட்டு கூறுவதாக நடிகர் அர்ஜூன் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் ஏற்கனவே நடிகர் அர்ஜூன், நடிகை சுருதி ஹரிகரண் மற்றும் பிற நடிகர்கள், நடிகைகளிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளனர்.

நடிகை ஆஜராக நோட்டீசு

கடந்த 3 ஆண்டுகளாக போலீசார் நடத்திய விசாரணையின் போது நடிகர் அர்ஜூன் மீது சுருதி ஹரிகரண் கூறிய பாலியல் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, நடிகர் அர்ஜூன் மீதான பாலியல் வழக்கில் கோர்ட்டில் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யவும் கப்பன்பார்க் போலீசார் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் அர்ஜூன் மீது கூறிய பாலியல் வழக்கில் நடிகை சுருதி ஹரிகரண் விசாரணைக்கு ஆஜராக கோரி கப்பன் பார்க் போலீசார் நோட்டீசு அனுப்பி வைத்துள்ளனர்.

அந்த நோட்டீஸ் கிடைத்த 3 நாட்களில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சுருதி ஹரிகரணுக்கு போலீசார் தெரிவித்துள்ளனர். நடிகை ஸ்ருதி ஹரிகரண் கூறிய பாலியல் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்கள் கிடைக்காததால், இந்த வழக்கில் நடிகர் அர்ஜூன் குற்றமற்றவர் என்று கூறி கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய கப்பன் பார்க் போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!