எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தானமளித்த எம்.ஜி.சி. லீலாவதி மரணம்!

எம்.ஜி.ஆருக்கு தனது சிறுநீரகம் தானமளித்த அவரது அண்ணன் மகள் எம்.ஜி.சி. லீலாவதி இன்று சென்னையில் காலாமானார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆருக்கு தனது சிறுநீரகத்தை தானமளித்தவருமான எம்.ஜி.சி. லீலாவதி இன்று சென்னையில் காலாமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த லீலாவதி( ( வயது 72) சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தானமாக கொடுத்த, அவருடைய அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி உடலுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி அஞ்சலி செலுத்தினார்.

லீலாவதி மறைவுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளனர்.

அதில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் புதல்வி, லீலாவதி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணா துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தோம்.

எம்.ஜி.ஆர். 1984-ல் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவருக்கு தன்னுடைய ஒரு சிறுநீரகத்தை அளித்து, புரட்சி தலைவரை வாழவைத்த போற்றுதலுக்குரிய பண்பாளர் லீலாவதி 37 ஆண்டுகள் இப்பூவுலகில் ஒரு சிறுநீரகத்தோடு வாழ்ந்து, இயற்கை எய்தியதை அறிந்து புரட்சி தலைவரின் கோடானு கோடி அன்பு தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களும் மிகுந்த வேதனை கொள்கிறது.

லீலாவதியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உற்றார்-உறவினர்களுக்கும் இந்த துயரத்தை தாங்கிக்கொள்ளக்கூடிய சக்தியையும், தைரியத்தையும் அளிக்கவேண்டும் என்றும், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெறவும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!