ஆளும் கட்சி பெண் தலைவரை அடித்து, உதைத்த வக்கீல்கள் – பாகிஸ்தான் கோர்ட்டில் அதிர்ச்சி

பாகிஸ்தான் கோர்ட்டில் வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெண் தலைவரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பெண் தலைவர் லைலா பர்வீன். இவர் தனது முன்னாள் கணவரும், வக்கீலுமான ஹஸ்னைன் தனக்கு வழங்கிய ‘செக்’ போலியானது என கூறி அவர் மீது வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையொட்டி விசாரணைக்கு ஆஜராகுவதற்காக லைலா பர்வீன் தனது சகோதரருடன் கோர்ட்டுக்கு சென்றார்.

அப்போது அங்கிருந்த ஹஸ்னைன் மற்றும் சக வக்கீல்கள் லைலா பர்வீனிடம் தகராறில் ஈடுபட்டனர். இதை தட்டி கேட்ட அவரது சகோதரரை வக்கீல்கள் அனைவரும் சேர்ந்து அடித்து, உதைத்தனர். இதை லைலா பர்வீன் தடுக்க முயன்றார்.

அப்போது வக்கீல்கள் அவரையும் சரமாரியாக அடித்து உதைத்ததாகவும், இதில் அவர் மயங்கியதாகவும் கூறப்படுகிறது. கோர்ட்டுக்குள் நடந்த இந்த வன்முறையால் அங்கு பெரும் பரரப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து தன்னையும், தனது சகோதரரையும் தாக்கிய முன்னாள் கணவர் ஹஸ்னைன் உள்பட அனைத்து வக்கீல்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி லைலா பர்வீன் போலீசில் புகார் அளித்தார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!