‘ஹைஹீல்ஸ்’ செருப்பு… உதட்டு சாயம்.. பட்டுக்கோட்டையை கலக்கும் ‘மாடர்ன்’ காளிமாதா!

பெண் சாமியார் ஒருவர் தன்னை காளிமாதா என கூறி பொதுமக்களுக்கு ஆசி வழங்கியது பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பாளையம் செம்பிரான்குளம் தென்கரையில் உள்ள அக்கினி காளியம்மன் கோவில் குடமுழுக்கு மற்றும் குருபூஜை விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் பெண் சாமியார் ஒருவர் வந்திருந்தார்.

அவர் சாதாரண சாமியார்களை போல இல்லாமல் மாடர்ன் உடையில் காட்சி அளித்தார். கண் இமையிலும், உதடுகளிலும் சாயம் பூசி இருந்தார். கழுத்து நிறைய நகைகளையும், நவநாகரிக பெண்கள் அணியும் ‘ஹைஹீல்ஸ்’ செருப்பும் அணிந்திருந்தார்.

தலைமுடியை வெள்ளை, செம்பட்டை நிறத்தில் கலரிங் செய்து இருந்த அவர், தான் ‘அகில இந்திய யுவமோட்சா தர்மாச்சாரியா’ பட்டம் பெற்றுள்ளதாகவும், தனது பெயர் ஸ்ரீ பவித்ரா காளிமாதா எனவும் கூறினார். மேலும் தன்னை சாமியார் என அழைக்கக்கூடாது எனவும், தான் காளி மாதா எனவும் சொல்லிக்கொண்டார்.

பட்டுக்கோட்டையை அடுத்த கரம்பயம் அவரது சொந்த ஊர் எனவும், திண்டுக்கல்லில் தற்போது வசிப்பதாகவும், அவரின் சீடர்கள் தெரிவித்தனர்.

அந்த பெண் சாமியாருக்கு எம்.ஜி.ஆர். பெயர் சூட்டியதாகவும், ஜெயலலிதா, அவரை போயஸ் கார்டனில் அழைத்து பேசியதாகவும், எடியூரப்பா, அவரது மகன் ஆகியோர் அவரிடம் ஆசி பெற்றதாகவும் பெண் சாமியாருடன் வந்தவர்கள் கூறினர். ‘கலக்கலாக’ உடை அணிந்து ஊர்வலமாக சென்ற அந்த பெண் சாமியாரிடம் ஏராளமானோர் ஆர்வத்துடன் ஆசி பெற்றுக்கொண்டனர். பெரியவர், சிறியவர் என பாராமல் பலரும் அவரின் காலில் விழுந்து ஆசி பெற்று சென்றனர்.

பின்னர் அந்த பெண் சாமியார் நிருபர்களிடம் கூறுகையில், ‘மழை வெள்ளத்தால் பயிர்கள் அழுகி விட்டன. இதற்கு மேல் விவசாயிகளுக்கு கஷ்டம் தரக்கூடாது. அம்மா நிறைந்த மனசோட சந்தோசமா இருக்கனும். எல்லோரையும் தீர்க்காயுசா, நல்லவிதமாக வைத்துக் கொள்ளனும். நாடு சுபிட்சமாக வளமா இருக்கனும் என்பதற்காக, பவித்ரா காளி மாதாவுக்கு அழைப்பு கொடுத்ததால் தான் நான் இங்கே வந்து இருக்கிறேன். எல்லோரையும் ஆசீர்வதிப்பதற்காகவும் வந்திருக்கிறேன். வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது’ என்றார்.

பெண் சாமியார் ஒருவர் தன்னை காளிமாதா என கூறி பொதுமக்களுக்கு ஆசி வழங்கியது பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!