அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த சமூக ஆர்வலருக்கு நடந்த பரிதாபம்!

பீகாரில் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்த சமூக ஆர்வலர் புத்திநாத் ஜா எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீகார் மாநிலத்தில் சமூக ஆர்வலர்கள் கொலை செய்யப்படும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் மேலும் ஒரு சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

பீகாரில் உள்ள மதுபானி மாவட்டம் பெனிபேட்டி என்ற இடத்தை சேர்ந்தவர் புத்திநாத் ஜா (வயது 22).

உள்ளூர் பத்திரிகையாளராக பணியாற்றி வந்த அவர் சமூக ஆர்வலராகவும் இருந்து வந்தார். அவர் பல்வேறு முறைகேடுகள், ஊழல்களை ஏற்கனவே அம்பலப்படுத்தி இருக்கிறார். அந்த பகுதியில் செயல்படும் போலி டாக்டர்கள், தவறாக செயல்படும் ஆஸ்பத்திரிகள் போன்றவை பற்றி அடிக்கடி தகவல்களை வெளியிட்டு சிக்க வைத்துள்ளார்.

இதன் காரணமாக பல ஆஸ்பத்திரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. அல்லது அதிக அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு ஆஸ்பத்திரியில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக பேஸ்புக்கில் தகவல் வெளியிட்டு இருந்தார். அன்று இரவு 9.50 மணியளவில் தனது வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்றார்.

10.10 மணியளவில் அவரை மார்க்கெட்டில் பார்த்ததாக சிலர் கூறினார்கள். அதன் பிறகு அவரை காணவில்லை. போலீசில் இதுபற்றி புகார் கூறப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர்.

அவருடைய செல்போன் மறுநாள் காலை செயல்பாட்டில் இருந்தது. 5 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பெடோன் என்ற இடத்தில் போன் இருப்பது தெரிய வந்தது. எனவே அந்த இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

5 நாட்களாக தேடி வந்த நிலையில் அவருடைய பிணம் பெடோன் அருகே புதருக்குள் எரிந்த நிலையில் கிடந்தது தெரிய வந்தது. அவருடைய உடல் முற்றிலும் எரிந்து இருந்தது. அதனால் எந்த அடையாளமும் தெரியவில்லை.

உறவினர்களை அழைத்து சென்று காட்டினார்கள். கையில் இருந்த மோதிரத்தை வைத்து அவர்கள் அடையாளம் கண்டனர்.

புத்திநாத் ஜாவை யார் கொலை செய்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இது சம்பந்தமாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அவருக்கு ஏற்கனவே பலமுறை கொலை மிரட்டல்கள் வந்தன. ஏராளமாக பணம் தருவதாக பலர் பேரம் பேசினார்கள். இந்தநிலையில்தான் கொலை நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!