விமான விபத்தில் உயிரை விட்ட பிரபல பாடகி!

இசை கச்சேரியில் பங்கேற்பதற்காக விமானத்தில் சென்ற பிரபல பாடகி விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.


பிரேசில் நாட்டின் பிரபல பாடகி மரிலியா மென்டோன்கா (வயது 26). இவர் நேற்று முன்தினம் மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் உள்ள கரட்டிங்கா என்ற இடத்தில் இசைக்கச்சேரி ஒன்றை நடத்துவதற்கு விமானத்தில் பயணம் ஆனார். அந்த விமானத்தில் அவரும், அவருடைய சித்தப்பாவும், தயாரிப்பாளரும், விமான சிப்பந்திகள் 2 பேரும் பயணம் செய்தார்கள்.

ஆனால் கரட்டிங்கா என்ற அந்த இடத்தை சென்றடைவதற்கு 12 கி.மீ. முன்னதாக அவர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விமானத்தில் இருந்த அனைவரும் கூண்டோடு பலியாகி விட்டனர். மறைந்த பாடகி மரிலியாவுக்கு 2 வயதான லியோ என்ற ஆண் குழந்தை இருக்கிறது.

பாடகி மரிலியா மென்டோன்கா, 2019-ம் ஆண்டின் லத்தீன் கிராமி விருது பெற்றவர் ஆவார். செர்டனேஜோ என்று அழைக்கப்படுகிற பிரேசிலிய நாட்டுப்புற இசையில் மிகப் பெரிய பெயர்களில் ஒன்றாக இவரது பெயர் திகழ்ந்தது. இளம் வயதிலேயே பாடத்தொடங்கி விட்டார்.

கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றால் இவரது கச்சேரிகள் ரத்து செய்யப்பட்டன. ஆனாலும் ஆன்லைன் இசை கச்சேரிகளில் பங்கேற்றார். அவற்றில் ஒன்று, யூ டியூப்பில் 33 லட்சம் பேரால் உலகம் முழுக்க கண்டுகளிக்கப்பட்டது. இதுதான் உலகளவில் நேரலையில் அதிகம்பேரால் யூடியூப்பில் கண்டு ரசிக்கப்பட்ட இசை நிகழ்ச்சி என்கிறார்கள். பாடகி மரிலியாவின் மறைவு இசைப்பிரியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!