தலை தீபாவளி கொண்டாட தந்தை வீடு சென்ற கர்ப்பிணி பிணமாக மீட்பு!

களக்காடு அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கர்ப்பிணி பிணமாக மீட்கப்பட்டார். 4 ஆயிரம் கோழிகளும் இறந்தன.

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கடந்த 3-ந் தேதி கனமழை கொட்டியது. இதனால் களக்காட்டில் ஓடும் கால்வாய் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சிதம்பரபுரம் பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பியதை அடுத்து, சிதம்பரபுரம் கால்வாய்களில் வந்த உபரிநீர் நாங்குநேரியான் கால்வாயில் திருப்பி விடப்பட்டது. இதனால் நாங்குநேரியான் கால்வாயில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சிதம்பரபுரம் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. களக்காடு-சிதம்பரபுரம் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

களக்காடு புதுத்தெரு ஆலமரம், சி.எஸ்.ஐ. சர்ச் தெரு, வரதராஜபெருமாள் கோவில் தெருக்களில் வெள்ளம் புகுந்தது. அப்பகுதியில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் தவித்தனர். மூங்கிலடி, கருவேலங்குளம் கருத்தான் தெரு கிராமங்களிலும் தண்ணீர் புகுந்தது.

இதற்கிடையே களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ராஜபுதூர் தெருவை சேர்ந்த முருகன் தனது மகள் கர்ப்பிணியான லேகா (வயது 23). அவரது கணவர் குமரி மாவட்டம் நாகர்கோவில் சூரங்குடியை சேர்ந்த பரமேஸ்வரன் ஆகியோரை தலை தீபாவளி கொண்டாட ஊருக்கு ஆட்டோவில் அழைத்து வந்தார். சிதம்பரபுரம் செல்லும் வழியில் உள்ள தரை பாலத்தின் மீது வெள்ளம் சென்றதால் ஆட்டோ செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து முருகன், லேகா, பரமேஸ்வரன், முருகன் மகன் பாரத் ஆகியோர் தண்ணீருக்குள் இறங்கி நடந்து சென்று பாலத்தை கடக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக திடீர் என காட்டாற்று வெள்ளம் 4 பேரையும் இழுத்து சென்றது. இதில் முருகன், பாரத், பரமேஸ்வரன் ஆகியோர் வெள்ளத்தில் நீந்தி கரை சேர்ந்தனர். லேகா வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சிதம்பரபுரம் இளைஞர்கள், நாங்குநேரி தீயணைப்பு நிலைய அதிகாரி பாபநாசம் தலைமையிலான வீரர்கள், லேகாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தீயணைப்பு வீரர்கள், பொதுப்பணித்துறையினா் கோவில்பத்தில் உள்ள ஆண்டிச்சி மதகை திறந்து, வெள்ளத்தை உப்பாற்றில் திருப்பினர். இதனைதொடர்ந்து நாங்குநேரியான் கால்வாயில் வெள்ளம் குறைந்தது. அதன் பின்னர் கால்வாயில் ஒரு மரத்தில் சிக்கியிருந்த லேகாவின் உடல் மீட்கப்பட்டது.

மேலும் களக்காடு அருகே இடையன்குளம் விலக்கு பகுதியில் புலவன்குடியிருப்பை சேர்ந்த துரை (51) என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். அங்குள்ள செவ்வாழை ஓடை உடைந்து வெளியேறிய வெள்ளம் கோழிப்பண்ணைக்குள் புகுந்தது. இதில் பண்ணையில் பராமரிக்கப்பட்டு வந்த 4 ஆயிரம் கோழிகள் தண்ணீரில் மூழ்கி இறந்தன.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!