ஆப்பிரிக்கா – 8 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசார் படிவம் கண்டெடுப்பு…!


ஆப்பிரிக்காவில் நீண்ட கழுத்து கொண்ட, 4 கால்களை உடைய நிலத்தில் வாழும் டைனோசார்கள் வாழ்ந்து வந்துள்ளன. இது டைனோசார்களின் காலம் அல்லது மீசோஜோயிக் காலம் என அழைக்கப்படுகிறது.

6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த டைனோசார்கள் இனம் பூமியில் இருந்து முற்றிலும் அழிந்து விட்டன. இந்த நிலையில் எகிப்து நாட்டின் மன்சவுரா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஹேஷம் சல்லாம் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில், சஹாரா பாலைவனத்தில் டைனோசார் படிவம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

இந்த வகை டைனோசார் மன்சவுராசாரஸ் ஷாகினே என அழைக்கப்படுகிறது. 33 அடி (10 மீட்டர்) நீளத்துடன் 5.5 டன்கள் (5 ஆயிரம் கிலோ) எடை கொண்டதுடன் நிலத்தில் வாழ்ந்த மிக பெரிய டைடனோசார் பிரிவை சேர்ந்தது.

ஒரு பள்ளி கூட பேருந்தின் அளவுள்ள, செடி, கொடிகளை உண்டு வாழ்ந்து வரும் வகையை சேர்ந்த இந்த டைனோசார், 8 கோடி ஆண்டுகளுக்கு முன்புள்ள காலத்தினை சேர்ந்தது என தெரிய வந்துள்ளது.


மத்திய தரைக்கடலுக்கு முன்பு இருந்து பழமையான சமுத்திரத்தின் கரையோரம் வாழ்ந்து வந்த இந்த வகை டைனோசார்கள் மீசோஜோயிக் காலத்தின் கடைசி 1.5 கோடி வருடங்களில் வாழ்ந்த ஒரு சில டைனோசார்களில் ஒன்றாகும்.

ஆராய்ச்சியாளர்கள், டைனோசாரின் மண்டை ஓடு, கீழ் தாடை, கழுத்து மற்றும் முதுகெலும்பு, இடுப்பு பகுதிகள், தோள் பட்டை மற்றும் முன்னங்கால்கள், பின்னங்கால்கள் மற்றும் ஆஸ்டியோடெர்ம்ஸ் ஆகியவற்றை கண்டெடுத்துள்ளனர்.

ஆப்பிரிக்காவின் பெரும் பகுதி புல்வெளிகள், சவான்னா காடுகள் மற்றும் மழை காடுகளால் சூழப்பட்டு உள்ளன. அவற்றிற்கு அடியில் மிக பெரிய பாறைகளில் புதைபொருள் படிவங்கள் இருக்க கூடும் என ஆராய்ச்சியாளர் கார்ஸ்கேக் கூறியுள்ளார்.

இவ்வகை டைனோசார்கள் ஐரோப்பிய மற்றும் ஆசிய வகை டைட்டனோசார்களுடன் நெருங்கிய தொடர்புடையவை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். – Source: dailythanthi.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!