தாயின் நீண்டநாள் ஆசை… அரசு ஆஸ்பத்திரியில் திருமணம் செய்த மகன்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் தாயின் ஆசையை நிறைவேற்ற தாய் மாமன் மகளை அரசு ஆஸ்பத்திரியில் வைத்து திருமணம் செய்தார் மகன்.

விழுப்புரம் திருக்காமு நகரை சேர்ந்தவர் தயாளன், (வயது 40). இவர் பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பதிவறை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார். திருமணம் ஆகவில்லை.

இவரது தாய் முத்தாலம்மாள் (67). இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது மகன் தயாளனுக்கு திருமணம் செய்து பார்க்க முடியவில்லை என முத்தாலம்மாள் வருந்தினார்.

இதை அறிந்த தயாளன் தனது தாயை பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த தாய் மாமன் மகள் காயத்திரி (30) என்பவரை உறவினர்கள் மத்தியில் பேசி திருமணம் செய்ய முடிவு செய்தார்.

இதையடுத்து ஆஸ்பத்திரி நுழைவு வாயில் அருகிலுள்ள அம்மன் கோவிலில் நேற்று மாலை தயாளன், காயத்திரியின் கழுத்தில் தாலிகட்டி திருமணம் செய்து கொண்டார். மணமக்களுக்கு நண்பர்கள், உறவினர்கள், ஆஸ்பத்திரி ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

திருமணம் முடிந்தவுடன் தாய் முத்தாலம்மாளிடம் ஆசிர்வாதம் வாங்க தயாளன் தனது மனைவியுடன் சென்றார். ஆனால் முத்தாலம்மாள் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவரை பார்க்க டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. தனக்கு திருமணம் நடந்த தகவலை தாய் முத்தாலம்மாளிடம் தெரிவிக்கும்படி கூறி விட்டு தயாளன் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார். ஆஸ்பத்திரியில் நடைபெற்ற திடீர் திருமணத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!