சிறுமி வயிற்றில் இருந்து அரை கிலோ முடி உருண்டை அகற்றம்!

முதல்முறை நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுமிக்கு மனநல சிகிச்சை அளிக்காமல் விட்டதால், மீண்டும் முடியை சாப்பிட தொடங்கியுள்ளார்.

குஜராத் மாநிலம், சூரத் மாவட்டம் காட் டாட் சாலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தாய் வீட்டு வேலை செய்து வருகிறார். தந்தை ஓர் ஆண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுமி உணவு சாப்பிட மறுத்துள்ளார். இதனால் இவரது உடல் எடை கணிசமாக குறைந்துள்ளது. இதனால் பயந்து போன சிறுமியின் குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது வயிற்றில் முடி உருண்டை இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை அறுவை சிகிச்சை செய்துதான் எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளனர்.

ஆனால், அறுவை சிகிச்சைக்கு அதிக செலவாகும என்பதால் சிறுமியை நியு சிவில் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிறுமி வயிற்றில் இருந்து சுமார் அரை கிலோ முடி உருண்டை அகற்றப்பட்டது.

இதுகுறித்து மருத்துவர் நிமேஷ் வர்மா கூறியதாவது:

சிறுமிக்கு இது இரண்டாவது முறை அறுவை சிகிச்சை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே காரணத்தால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிறுமிக்கு மன அழுத்தம் காரணமாக முடி சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. மன அழுத்தம் ஏற்பட்டால் தலை முடியை பிடுங்கி சாப்பிடுவார். சீப்பில் முடி இருந்தாலும் கூட அதை சேகரித்து சாப்பிடுவார். இந்த அரியவகை குறைப்பாட்டிற்கு ட்ரைக்கோபெசோவர் என்று பெயர். முதல்முறை நடந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறுமிக்கு மனநல சிகிச்சை அளிக்காமல் விட்டதால், மீண்டும் முடியை சாப்பிட தொடங்கியுள்ளார். அதனால், இம்முறை மனநல சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்குப் பிறகே சிறுமியின் மன அழுத்தத்தற்கான காரணம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!