மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சாதனை!

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு உறுப்பு மாற்றம் செய்யும் முயற்சிக்கான ஆய்வுகளை அமெரிக்க டாக்டர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதால் மூளைச்சாவு அடைந்த பெண் ஒருவருக்கு ஆக்சிஜன் கொடுப்பதை நிறுத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியிடம் இருந்து சிறுநீரகத்தை பொருத்தி சோதனை நடத்த உறவினர்களிடம் டாக்டர்கள் அனுமதி கேட்டனர்.

உறவினர்கள் சம்மதம் தெரிவித்ததை அடுத்து அவருக்கு பன்றியின் சிறுநீரகம் பொருத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

பெண்ணின் உடலில் பொருத்தப்பட்ட பன்றியின் சிறுநீரகம் நன்றாக செயல்பட்டு சரியான அளவு சிறுநீரை வெளியேற்றியது. பன்றியின் சிறுநீரகம் அப்பெண்ணின் உடம்புக்கு வெளியே வைத்து அவரின் ரத்த குழாய்களில் இணைக்கப்பட்டு 3 நாட்கள் பராமரிக்கப்பட்டது.

அது மூளை சாவு அடைந்த நபரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தால் நிராகரிக்கப்படாமல் இயங்கியது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் கெரோட்டின் அளவு வழக்கமான நிலைக்கு வந்தது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!