ஆர்யன்கான் ஜாமீன் வழங்க கோரிய வழக்கில் நடந்தது என்ன..?

ஜாமீன் மறுக்கப்பட்டதையடுத்து மும்பை உயர்நீதிமன்றத்தை நாட ஆர்யன்கான் தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் இருந்து கடந்த மாதம் 3-ந் தேதி கோவாவுக்கு சென்று கொண்டிருந்த சொகுசு கப்பலில் நடுக்கடலில் வைத்து போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் (என்.சி.பி.) சோதனை நடத்தினார்கள்.

அந்த சொகுசு கப்பலில் போதை விருந்து நடைபெற்றது தெரிய வந்தது.

நடுக்கடலில் நடந்த போதை விருந்தில் பிரபல நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் பங்கேற்றது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆர்யன்கான், அவரது நண்பர் அர்பாஸ் மெர்ச்சண்ட் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இதுவரை நைஜீரியாவை சேர்ந்த 2 பேர் உள்பட மொத்தம் 20 பேர் பிடிப்பட்டு உள்ளனர்.

ஆர்யன்கான் போதை பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அவர் மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆர்யன்கான் ஜாமீன் கேட்டு ஏற்கனவே கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை நிராகரித்து ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்து விட்டது. மேலும் அவரை 14 நாட்கள் சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டது. கடந்த 8-ந் தேதியில் இருந்து அவர் சிறையில் இருந்து வருகிறார்.

இந்தநிலையில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி ஆர்யன்கான் 2-வது முறையாக மனுதாக்கல் செய்தார்.

மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது தள்ளி வைக்கப்பட்டது. என்.சி.பி. தரப்பில் ஆர்யன்கான் வழக்கமாக போதை பொருள் உட்கொள்பவர் என்று கோர்ட்டு தெரிவித்தது. அதேநேரத்தில் ஆர்யன்கான் தரப்பு வக்கீல் ஆர்யன்கானிடம் இருந்து எந்தவித போதை பொருட்களும் கைப்பற்றியதற்கான ஆதாரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜாமீன் மனு மீதான விசாரணை 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் ஆர்யன்கான் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமீன் வழங்க சிறப்பு நீதிமன்றம் மறுத்ததுடன் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து ஜாமீன் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தை நாட ஆர்யன்கான் தரப்பு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!