73 ஆண்டுகளுக்கு பிறகு படிப்பை முடித்த மூதாட்டி!

கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்லூரி படிப்பை முழுமையாக நிறைவு செய்து இளங்கலை பட்டம் பெற்றுள்ளார் மூதாட்டி.

இஸ்ரேலை சேர்ந்த மூதாட்டி ஜிஹாத் பூட்டோ (85). படிப்பு மீது தீராத ஆர்வம் கொண்ட இவர் தனது சிறு வயதில் படித்து வந்துள்ளார்.

1948-ம் ஆண்டில் தனது 12-வது வயதின் போது இஸ்ரேலிய படையெடுப்பு நடந்தது. இதனால் படிப்பை தொடர முடியாத சூழலில், பூட்டோ தனது குடும்பத்துடன் நகரைவிட்டு வெளியேறினார்.

ஆனாலும் நாட்டின் சூழல், குடும்ப சூழல் காரணமாக பூட்டோவின் படிப்பு அத்துடன் நிறுத்தப்பட்டு அவருக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

7 குழந்தைகளுக்கு தாயான பூட்டோவின் மனதில் படிப்பை தொடர முடியாத ஏக்கம் மட்டும் நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.

இந்தநிலையில் தனது 81-வது வயதில் படிப்பை தொடர முடிவு செய்த பூட்டோ, அங்குள்ள கபார் பாரா என்ற இஸ்லாமிய ஆய்வு கல்லூரியில் இணைந்து படிப்பை மேற்கொண்டார்.

இதற்கிடையே கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கல்லூரி படிப்பை முழுமையாக நிறைவு செய்து இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.

கல்வி மீது கொண்ட ஆசையால் சுமார் 73 ஆண்டுகளுக்கு பிறகு தனது படிப்பை முடித்த மூதாட்டி பூட்டோவை பலரும் பாராட்டி வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!