ஆற்று வெள்ளத்தில் அசத்தல் ஓட்டல்… படையெடுக்கும் மக்கள்!

தாய்லாந்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருவதால் பல்வேறு நகரங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அங்கு ஓடும் பிரதான ஆறான, சாவோ பிரயா ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அந்த ஆற்றின் கரையோர ஓட்டல்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் ஓட்டல்களை பலர் மூடி விட்டனர்.

எனினும் ஒரேஒரு ஓட்டல் மட்டும் வெள்ளத்திலும் தாக்குபிடித்து மக்களுக்கு சேவை செய்து கவர்ந்து வருகிறது. பாங்காக் அருகில் உள்ள நொந்தன்புரியில் (Nonthaburi), ஆற்றின் கரையோர உணவகங்களும் வெள்ளம் காரணமாக மூடப்பட்டன. கொரோனா காரணமாக ஏற்கனவே பொருளாதார பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், இப்போது வெள்ளமும் பாதிப்பை ஏற்படுத்துவதால் கரையோர ஓட்டல் உரிமையாளர்கள் கவலை கொண்டனர்.

இந்நிலையில் சோப்ரயா ஆண்டிக்யூ கபே (Chaopraya Antique Café ) என்ற ஓட்டலின் உரிமையாளர் புதுமையாக யோசித்தார். அதாவது, வெள்ளத்திற்கு நடுவில் ஓட்டலை திறக்க முடிவு செய்தார். திறக்கவும் செய்தார். தொடக்கத்தில் கூட்டமில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. ஆனால் வித்தியாசமான இந்த ஓட்டல் குறித்து தகவல் பரவியதும் மக்கள் குவிந்தனர்.

வெள்ள நீரால் சூழப்பட்டிருக்கும் மேஜைகளில் அமர்ந்தபடி, ஜாலியாக முட்டளவு நீரில் கால்களை நனைத்துக் கொண்டே, இங்கு சாப்பிடுவதை பலர் விரும்பத் தொடங்கினர். இப்போது இந்த ஓட்டலின் இருக்கைக்குப் பலர் சில மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாம். இந்த ஓட்டல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.- source: newstm * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!