ஏழை பெண்களுக்காக நாசர் நடத்தி வரும் இலவச ஆடை வங்கி!

பல ஆண்டுகள் ஆனாலும் கூட திருமணத்தின் போது அணிந்த ஆடைகளை பெண்கள் மீண்டும் எடுத்து பயன்படுத்துவது இல்லை.

ஒவ்வொரு பெண்ணும் திருமணத்தின் போது அழகான ஆடைகளை அணிய வேண்டும் என்று விரும்புவது வழக்கம்.

ஆனால் ஏழை பெண்களால் அதுபோன்ற உடைகளை வாங்குவது என்பது முடியாத காரியம். அதே நேரம் விதவிதமான உடைகளை திருமணத்தின் போது அணியும் மணமக்கள், குறிப்பாக பெண்கள், திருமணம் முடிந்த பின்னர் அந்த உடைகளை பயன்படுத்துவது இல்லை.

மாறாக அதனை பெட்டியில் போட்டு பூட்டி வைத்துவிடுவது வாடிக்கை. பல ஆண்டுகள் ஆனாலும் கூட திருமணத்தின் போது அணிந்த ஆடைகளை அவர்கள் மீண்டும் எடுத்து பயன்படுத்துவது இல்லை.

இது போன்று பலரும் திருமண ஆடைகளை பாதுகாத்து வருவது வாடிக்கை. ஆனால் இந்த உடைகளை வாங்க முடியாத ஏழை பெண்களுக்கு வழங்கினால் என்ன? என்ற எண்ணம் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த நாசர் தூதா என்ற வாலிபருக்கு ஏற்பட்டது.

அவரது வீட்டிலும் திருமணத்திற்காக அவரின் மனைவி அணிந்த உடைகள் அனைத்தும் பீரோவிலேயே இருந்தது. அந்த ஆடைகளை ஏழைகளுக்கு தானமாக வழங்கினால் என்ன? என்ற எண்ணமும் அவருக்கு ஏற்பட்டது.

இது பற்றி மனைவி மற்றும் நெருங்கிய உறவினர்களிடம் பேசிய நாசர் தூதா இதற்கான முயற்சியில் இறங்கினார். மலப்புரம்- பாலக்காடு எல்லையில் இதற்காக ஒரு கடையை தேர்வு செய்து அதனை திருமண ஆடை வங்கியாக மாற்றினார்.

அங்கு தனது மனைவியின் திருமண ஆடைகள் மற்றும் நெருங்கிய உறவினர்களின் ஆடைகளை பெற்று அதனை காட்சிக்கு வைத்தார். திருமணம் நிச்சயமான ஏழை பெண்கள் இந்த வங்கிக்கு சென்று தங்களுக்கு பிடித்தமான ஆடைகளை இலவசமாக தேர்வு செய்து கொள்ளலாம் எனவும் அறிவித்தார்.

திருமண ஆடைகள் எடுக்க பணமின்றி தவித்த ஏழை பெண்கள் பலர் இந்த ஆடை வங்கிக்கு வரத்தொடங்கினர். அவர்கள் தங்களுக்கு தேவையான உடைகளை அங்கிருந்து எடுத்து சென்றனர். அவர்களிடம் திருமணம் முடிந்த பின்னர் விரும்பினால் அந்த உடைகளை மீண்டும் ஆடை வங்கியில் ஒப்படைக்கலாம், இல்லையேல் நீங்களே வைத்து கொள்ளலாம் எனவும் கூறினார்.

முதலில் இங்கு வர தயங்கிய பெண்கள் இப்போது அதிகளவில் வரத்தொடங்கினர். மேலும் இந்த திட்டத்தால் கவரப்பட்ட பலரும் தாங்கள் பயன்படுத்திய திருமண ஆடைகளை இந்த வங்கிக்கு தானமாக வழங்கவும் முன்வந்தனர். இதனால் இப்போது அங்கு ஏராளமான திருமண ஆடைகள் குவிந்துள்ளன. இதுபோல ஆடைகளை வாங்க வருவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நாசர் முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். ஊர் திரும்பிய பின்னர், அவர் மீண்டும் வெளிநாட்டு வேலைக்கு செல்லவில்லை.

இப்போது ஆடை வங்கிக்கு திருமண ஆடைகளை திரட்டுவதிலும், தேவைப்படுவோருக்கு அதனை வழங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். நாசரின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!