சைடஸ் கேடிலாவின் தடுப்பு மருந்து பரிசோதனையில் ஆச்சரியம் தரும் முடிவுகள்..!

சைடஸ் கேடிலாவின் தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்ட பின் காய்ச்சல், அசதி போன்ற உடல் பாதிப்புகள் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சைடஸ் கேடிலா நிறுவனம் தயாரித்துள்ள சைகோவ்-டி எனப்படும் கொரோனா தடுப்பு மருந்தை 12லிருந்து 18 வயது வரையுள்ள சிறார்களுக்கு பயன்படுத்த இந்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

தற்போது ஆய்வகத்தில் இருந்து பயன்பாட்டிற்காக, முதல்கட்டமாக 4 தொகுதிகள் கொண்ட தடுப்பு மருந்து வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு வர உள்ளது.

நாடு முழுவதும் 50 பரிசோதனை மையங்களில் 1600 சிறார்களுக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது.அந்த பரிசோதனையில் பங்கேற்ற கடைசி பங்கேற்பாளருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் 23-ம் தேதி 3-ம் டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

கடைசி கட்டத்தில் உள்ள இந்த பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் சில முடிவுகள் கிடைத்துள்ளன. அதன்படி, வழக்கமாக கொரோனா தடுப்பூசி செலுத்தியவுடன் ஏற்படும் காய்ச்சல், உடல் அசதி, ஊசி போட்ட இடம் வலி எடுத்தல், சிவந்து போகுதல் போன்ற அறிகுறிகள் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

47 சிறார்களுக்கு 28 நாட்கள் இடைவெளி விட்டு மூன்றாம் டோஸ் தடுப்பூசி மருந்தும் செலுத்தப்பட்டு பரிசோதனை நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் எவருக்கும் மேற்கண்ட பாதிப்புகள் தென்படவில்லை என்று இந்த பரிசோதனைகளை கண்காணித்து வருபவரும், டி ஒய் பாட்டில் மருத்துவக் கல்லூரியின் மருத்துவருமான, ஷலாகா அகார்கேட்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்த பரிசோதனை செப்டம்பர் மாதம் நிறைவடைந்தது. அனைத்து பரிசோதனை முடிவுகளும் வெற்றிகரமாக அமைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான இந்த சைகோவ்-டி தடுப்பு மருந்து 3 டோஸ் கொண்டதாகும். ஒவ்வொரு டோஸ் மருந்தையும் 28 நாட்கள் இடைவெளியில் செலுத்திக் கொள்ள வேண்டும். இந்த தடுப்பு மருந்தை ஊசி இல்லாமல், ஜெட் இன்ஜெக்டர் மூலம் தோலுக்கு அடியில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!