மீண்டும் சூடுபிடிக்கும் ராம்குமார் மரண வழக்கு – சுவாதி மரணபின்னணியும் வெளியாகுமா?

தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பிய ஸ்வாதி கொலை – ராம்குமார் மர்ம மரணம் தொடர்பாக மீண்டும் விசாரிக்கப்படுகிறது. சென்னை புழல் சிறையில் ராம்குமார் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதன் மர்மம் இந்த விசாரணையில் அம்பலமாகும் என தெரிகிறது.

2016-ம் ஆண்டு தமிழகத்தை உலுக்கி எடுத்த பல்வேறு சம்பவங்களில் நுங்கம்பாக்கம் ஸ்வாதி கொலை வழக்கு மிக முக்கியமானது.
2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ந் தேதி பரபரப்பான காலை நேரம்… சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம் பெண் ஒருவர் ரயிலுக்காக காத்திருந்தார். சென்னை போன்ற பெருநகரங்களின் இயந்திர வாழ்க்கை சக மனிதர்களைக் கூட ஏறெடுத்துப் பார்க்காத ஒன்றாக ஓட்டமும் நடையுமாக இருக்கும். அடுத்தடுத்து சீறிப் பாயும் மின்சார ரயில்களில் எப்படியாவது ஏறி உரிய நேரத்துக்கு செல்ல வேண்டிய இடத்துக்கு செல்வதில்தான் அத்தனை மனிதர்களும் அந்த தருணத்தில் கவனமாக இருந்தனர்.

இளம்பெண் ஸ்வாதி படுகொலை

அப்போதுதான் அந்த இளம் பெண் வீறிட்டு மரண ஓலம் எழுப்பும் கதறல் கேட்டது… கண்ணிமைக்கும் நேரத்தில் இளைஞர் ஒருவர் அந்த பெண்ணை அரிவாளால் முகத்தில் வெட்டியதில் சமபவ இடத்திலேயே விழுந்து ரத்த வெள்ளத்தில் பலியானார். வெட்டிய நபர் ஜனக் கூட்டத்துக்கு இடையே சகஜமாக நடந்தே தப்பிச் சென்றார்… சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இறந்த பெண்ணின் பெயர் ஸ்வாதி (சுவாதி), சாப்ட்வேர் இன்ஜினியர் என தகவல் தெரிவிக்க டிவி சேனல்களில் பிரேக்கிங் நியூஸாக “சென்னை நுங்கம்பாக்கத்தில் இளம் பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் சுவாதி வெட்டி படுகொலை “என அலறத் தொடங்கின. ஒருதலைக் காதலால் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என வழக்கம் போல ஹேஷ்யங்கள் சில மணிநேரம் ஓடின. பொதுவாக இப்படியான குற்றச்செயல்கள் போலீசாரின் போக்கில் போயிருந்தால் நிஜமான குற்றவாளி யார்? ஏன் இந்த கொலை நடந்தது? என்பது தெரிந்திருக்கும். ஆனால் ஸ்வாதி என்கிற சுவாதி கொலை சம்பவமானது கிரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் ட்விஸ்ட்டுகளை மிஞ்சியதாக உருமாறக் காரணமாக இருந்தது அந்த ஒற்றை ஃபேஸ்புக் பதிவு. அந்த பதிவை போட்டவர் ஒய்.ஜி.மகேந்திரன். ஆம் மூத்த திரைப்பட, நாடக நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன்தான் அவர். அதுவும் ஸ்வாதி கொலை நடந்த சிறிது நேரத்திலேயே நாட்டையே திரும்பிப் பார்க்க வைக்கிற பதிவை ஒய்.ஜி.மகேந்திரன் பதிவிட்டிருந்தார்.

ஒய்.ஜி.மகேந்திரன் பற்ற வைத்த நெருப்பு

“ஸ்வாதி என்ற பிராமணப் பெண் கொடூரமாக பிலால் மாலிக் என்ற மிருகத்தால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார். தமிழகத்தில் மயான அமைதி நிலவுகிறது. யாருமே கண்டனம் தெரிவிக்கவில்லை. இதே ஸ்வாதி தலித்தாக இருந்திருந்தால் ராகுல் ஓடி வந்திருப்பான். ஊடங்கங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து ஒப்பாரி வைத்திருக்கும். தலித் இயக்கங்கள் மறியல் போராட்டம் என பொங்கியிருப்பார்கள். திராவிட அரசியல் பொறுக்கிகள் தாண்டவம் ஆடியிருப்பார்கள். காம ரேட்டு கயவர்கள், மாதர் சங்கங்கள் ஓலமிட்டிருப்பார்கள். என்ன செய்வது இறந்தது பிராமண பெண். இதை வைத்து அரசியல் செய்தால் எந்த லாபமும் இருக்காது. செத்தவனிலும் ஜாதி பார்க்கும் இந்த அவலம் எப்போது மாறும்??? இறைவா இந்த தமிழகத்தை எப்படி தான் மாற்றப் போகிறாயோ???” இதுதான் ஒய்.ஜி.மகேந்திரனின் அந்த பேஸ்புக் பதிவு. இந்த ஒற்றைப் பதிவால்தான் இன்றளவும் ஸ்வாதி கொலை வழக்கு அவிழ்க்கப்படாத ஆயிரத்தெட்டு மர்மம முடிச்சுகளுடன் உறங்கிக் கொண்டே இருக்கிறது. இப்படி ஒரு ஃபேஸ்புக் பதிவு மிகப் பெரிய அதிர்வலைகளையும் விவாதங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பிவிட்டது. இதனைத்தான் எதிர்பார்த்தாரோ இல்லை யதார்த்தமாக பதிவிட்டாரோ என்னவோ திடீரென அப்படியான ஒரு பதிவு ஒரு பார்வேர்டு மெசேஜ் என கூறி இந்த பதிவை நீக்கியதுடன் அடுத்தடுத்து ஆங்கிலத்தில் தன்னிலை விளக்கமாக கொடுத்து தள்ளினார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். ஆனால் அந்த ஒற்றைப் பதிவின் மூலம் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் பற்ற வைத்த பெருநெருப்புதான் ஒரு இளைஞனின் வாழ்க்கை மர்மமாக முடிந்து போக காரணமா? என்பது இன்னமும் கன்னித்தீவு கதையாக நீண்டுகொண்டே இருக்கிறது.

ராம்குமார் கைதும் தற்கொலையும்

ஸ்வாதியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமார் 2016-ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த கைது சம்பவமும் சும்மா நடந்துவிடவில்லையாம். போலீசார் ராம்குமார் வீட்டுக்கு சென்ற போது திடீரென பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்ய முயன்றார் ராம்குமார் என்றது போலீஸ் தரப்பு. பின்னர் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ராம்குமார் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ராம்குமாருக்கும் ஸ்வாதிக்கும் என்ன தொடர்பு? ராம்குமார் ஸ்வாதியை எப்போதிருந்து காதலித்தார்? இருவருக்குமான தொடர்புகளுக்கு ஆதாரங்கள் என்ன? என எந்த கேள்விக்கும் பதில் சொல்லப்படவே இல்லை. ராம்குமாரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்தார்கள்…வீடியோ கான்பரன்ஸ் மூலம் நீதிபதி விசாரித்தார்.. எல்லாமும் சரி… ஸ்வாதி-ராம்குமார் பின்னணி குறித்து எதுவுமே யாருக்குமே சொல்லப்படவும் இல்லை? ஸ்வாதி கொலை வழக்கில் பிலால் என்ற பெயர் ஏன் உருட்டப்பட்டது என்பதற்கான பின்னணியும் யாருக்கும் தெரியாது? இப்படியான சூழ்நிலையில் திடீரென அந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி சென்னை புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் என்பதுதான் அந்த அதிர்ச்சியான செய்தி. அதுவும் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டது எப்படி என போலீஸ் சொன்னது தெரியுமா? சிறையின் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்து கொண்டார் ராம்குமார் என ஆகப் பயங்கரமான ஒன்றை சொன்னது போலீஸ். நெல்லையில் சிக்கிய போது கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக சொன்ன போலீஸ் இப்போது புழல் சிறையில் மின் கம்பியை கடித்தே செத்துப் போய்விட்டார் என்றது. ராம்குமாரின் சோ கால்ட் தற்கொலையுடன் இந்த கொலை வழக்கின் அத்தனை மர்மங்களும் அப்படியே ஆழக் குழி தோண்டி புதைக்கப்பட்டன. ஆனால் ராம்குமார் தரப்பு இந்த வழக்கை சும்மா விட்டுவதாகவும் இல்லை.

மீண்டும் விசாரிக்கிறது போலீஸ்

ஒருகட்டத்தில் ஸ்வாதி கொலை வழக்கின் பின்னணியில் பயங்கரவாத செயல் ஒன்று உள்ளது. அதனால் தேசிய புலனாய்வு ஏஜென்சிதான் இதனை விசாரிக்க வேண்டும் என்று ராம்குமார் தரப்பு கோரியது. அதாவது பிராமணப் பெண்ணான ஸ்வாதி, இஸ்லாமியரான பிலால் என்பவரை காதலித்தாரா? அப்படி இஸ்லாமியரை காதலித்ததால் ஸ்வாதி என்ற பிராமணப் பெண்ணை இந்துத்தீவிரவாதிகள் வெட்டிக் கொன்றனரா? என்கிற கேள்விகள் இதன் மூலம் எழுந்தன. ராம்குமார் மரண வழக்கை தாமாகவே முன்வந்து மாநில மனித உரிமைகள் ஆணையம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. கடந்த மாதம் கூட இந்த விசாரணையின் போது சிறைத்துறை அதிகாரிகள் ஆஜராகி இருந்தனர். இந்த வழக்கை தற்போது போலீசார் மீண்டும் தூசுதட்டப் போவதாக சொல்லப்படுகிறது. அதாவது கோடநாடு கொலை- கொள்ளை சம்பவத்தின் மர்ம மரணங்கள் மீண்டும் விசாரிக்கப்படுவதைப் போல ஸ்வாதி கொலை-ராம்குமார் மர்ம மரண விவகாரமும் இப்போது உயிர்ப்பிக்கப்படுகிறது. இந்த மீள் விசாரணையில் யார் யார் விசாரிக்கப்படப்போகிறார்கள் என்பது போலீஸுக்கே வெளிச்சம். புழல் ஜெயில் அதிகாரிகள், வார்டன்கள், ஏன் திடீரென முகநூலில் வழக்கு குறித்து பதிவிட்ட ஒய்.ஜி.மகேந்திரன்கூட விசாரிக்கப்படலாம் என்கிறது போலீஸ் தரப்பு. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ராம்குமார் தற்கொலை வழக்கு அந்த பரபரப்புக்குள் அடங்கி போனது. ராம்குமார் தரப்பில் பலரும் வழக்கு போட்டனர். அவரது பிரேத பரிசோதனை வீடியோ பதிவு செய்யப்பட்டது. மறுவிசாரணை ராம்குமார் மரண மர்மத்தை மட்டுமல்ல சுவாதி கொலையின் பின்னணியையும் வெளிகொணரலாம்.-source: oneindia * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!