பெற்ற தாய்க்கு சிலை அமைத்து வழிபட்டு வரும் குடும்பத்தினர்!

பெற்ற தாய் உயிருடன் இருக்கும்போது அவர்களை முதியோர் இல்லத்தில் அனுப்புவர்களுக்கு மத்தியில் இறந்த தாய்க்கு மகன் கோவில் கட்டி வழிபாடு செய்வது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மணலி பஸ் நிலையம் எதிரே உள்ள ஹரிகிருஷ்ண பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவகலை(85). இவருக்கு பத்து மகன்கள், மூன்று மகள்கள் இருந்தனர்.

இவரது கணவர் ராமதாஸ், கடந்த 40 வருடங்களுக்கு முன்பு இறந்து போனார். அன்று முதல் துணி தைப்பது, உள்பட சிறிய வேலைகளை செய்து மகன், மகள்களை மிகவும் அரவணைப்போடு வளர்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28- ந்தேதி சிவகலையின் 12-வது மகன் கோட்டீஸ்வரன் கொரோனா தொற்றால் உயிர் இழந்தார்.இதில் அதிர்ச்சி அடைந்த தாய் சிவகலையும் அன்றே இறந்து போனார்.

இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உயிரிழந்த தாய் சிவகலைக்கு கோவில் கட்டி வழிபட 13-வதாக பிறந்த மகன் சரவணன் முடிவு செய்தார். அவர் அதே பகுதியில் கோழிகறிக்கடை நடத்தி வருகிறார்.

இதைத்தொடர்ந்து சரவணன், மகாபலிபுரத்தில் உள்ள ஒரு சிற்பக்கலைஞரிடம் தனது தாயின் புகைப்படத்தை கொடுத்து சிலையை செதுக்கி வாங்கினார். இதற்கு சுமார் ரூ.1 லட்சம் செலவானதாக தெரிகிறது. தயாரான சிவகலையின் மார்பளவு சிலையை, சரவணன், தனது வீட்டின் முன்பக்கத்தில் கோவில் கட்டி வைத்துள்ளார். நேற்று இந்த சிலை பிரதிஷ்டை நடைபெற்றது.

சிவகலைக்கு பேரன், பேத்தி, கொள்ளு பேரன், கொள்ளு பேத்தி என மொத்தம் 70 பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் சிவகலையின் நினைவு தினமான நேற்று பால் அபிஷேகம் செய்தனர்.

பெற்ற தாய் உயிருடன் இருக்கும்போது அவர்களை முதியோர் இல்லத்தில் அனுப்புவர்களுக்கு மத்தியில் இறந்த தாய்க்கு மகன் கோவில் கட்டி வழிபாடு செய்வது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!