கொரோனாவால் மரணமான காதல் மனைவிக்கு கோவில் கட்டி வழிபடும் கணவர்!

ஷாஜபூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சம்ப்கேடா கிராமத்தை சேர்ந்த நாராயண் சிங் ரத்தோர் என்பவர் கொரோனாவால் உயிரிழந்த காதல் மனைவிக்கு கோவில் கட்டி வழிபாடு செய்து வருகிறார்.

இந்தியாவில் ஆண்கள் தங்கள் மனைவியின் நினைவாக கட்டிய பல நினைவு சின்னங்கள் உள்ளன. அதில் ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் அவற்றில் மிகவும் புகழ்பெற்றது. அத்தகைய ஆண்களின் பட்டியலில் மத்தியபிரதேசத்தின் ஷாஜபூர் மாவட்டத்தை சேர்ந்தவரும் இணைந்து உள்ளார்.

ஷாஜபூரில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சம்ப்கேடா கிராமத்தை சேர்ந்தவர் நாராயண் சிங் ரத்தோர். இவரது மனைவி கீதாபாய். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

கொரோனா 2-வது அலையில் அவரது மனைவி கீதாபாய் இறந்து விட்டார். அவரது நினைவாக இருந்த நாராயண் சிங் ரத்தோர், மனைவிக்கு ஒரு கோவிலை கட்ட முடிவு செய்தார். அதன்படி காதல் மனைவிக்கு அவரது சொந்த இடத்தில் கோவிலை கட்டினார். மேலும் அதில் தனது மனைவியின் சிலையை நிறுவினார். அதனை தினந்தோறும் வழிபாடு செய்து வருகிறார். கோவிலில் கீதாபாய் சிலையை அமைப்பதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்கள் அனைத்து சடங்குகளையும் செய்தனர். இப்போது, அவர்கள் தினமும் சிலையை வணங்குகிறார்கள்.

ரத்தோரின் மூத்த மகன் லக்கி இதுகுறித்து கூறுகையில், “இந்த கோவில் என் தாய் எங்களை சுற்றி இருக்கிறார் என்ற உணர்வை தருகிறது” என்றார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!