அன்னூரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் வழக்கில் திடீர் திருப்பம்…!


அன்னூரில் பெண்ணை கொன்று நகை -பணத்தை கொள்ளையடித்த வட மாநில கொள்ளையர்களை பிடிக்க ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கணுவாக்கரை ஊஞ்சல் குட்டை தோட்டத்தை சேர்ந்தவர் மயில்சாமி (54). விவசாயி. இவரது மனைவி ராஜாமணி (48).

இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் கோவையில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகள் படித்து வருகிறார். எனவே கணவன்- மனைவி இருவரும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவர்கள் புதிதாக வீடு கட்டி வருகிறார்கள். இதற்கு டைல்ஸ் ஒட்டும் பணியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 பேர் பணியாற்றி வந்தனர்.

நேற்று முன்தினம் பணி முடிந்து 3 பேரும் மயில்சாமி தோட்டத்தில் தங்கினர். நள்ளிரவு 12 மணியளவில் டைல்ஸ் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த 3 பேரும் மயில்சாமி வீட்டின் கதவை தட்டினர். அப்போது தூங்கி கொண்டிருந்த மயில்சாமி எழுந்து வந்து கதவை திறந்தார். வெளியே நின்று கொண்டிருந்த 3 பேரும் குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்டனர்.

அதன்படி மயில்சாமி தண்ணீர் எடுத்து வர வீட்டிற்குள் சென்றார். அவரை பின் தொடர்ந்து சென்ற 3 பேரும் கையில் வைத்திருந்த உருட்டுக் கட்டையால் அவரை சரமாரி தாக்கினார்கள். அவர் தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் மயில்சாமி உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொல்ல முயன்றனர். அவர் மயங்கி விழுந்தார். கணவரின் சத்தம் கேட்டு ராஜாமணி அங்கு ஓடி வந்தார்.


அவரையும் பூரி கட்டையால் தாக்கினார்கள். பின்னர்அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தனர். அவர் அணிந்திருந்த நகை மற்றும் பீரோவில் வைத்திருந்த நகை என மொத்தம் 8 பவுன் நகையை எடுத்தனர். பீரோவில் வைக்கப்பட்டு இருந்த ரூ. 1 லட்சம் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

இந்த கொலை – கொள்ளை குறித்த தகவல் கிடைத்ததும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணையில் கொலையாளிகள் குறித்து அடையாளம் தெரிந்தது. அவர்கள் மேற்கு வங்காளத்தை சேர்ந்த சாம்ராட் (25), அஜய் (18), பிந்து (25) என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

அவர்கள் பெண்ணை கொன்று நகை -பணத்தை கொள்ளையடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றது தெரிய வந்தது. அவர்கள் வைத்திருந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்த போது அவர்கள் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து பெருந்துறை டி.எஸ்.பி. தலைமையில் 10 போலீசார் சென்னிமலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மேலும் தனிப்படையினர் சென்னை, அவினாசி, திருப்பூர், புளியம்பட்டி, சத்தி ஆகிய இடங்களுக்கும் விரைந்துள்ளனர். கொலையாளிகள் ரெயிலில் தப்பி விடக் கூடும் என்ற நோக்கத்தில் திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் ஆகிய ரெயில் நிலையங்களிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!