கொரோனாவால் உயிருக்கு போராடிய குழந்தை – நர்சு செய்த நெகிழ்ச்சி செயல்!

கொரோனா தொற்று பாதித்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த நர்சு தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவர் நன்மணிக்கரா பஞ்சாயத்து பகுதியில் உள்ள குடும்பநல மையத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று நர்ஸ் ஸ்ரீஜா விடுமுறையில் வீட்டில் இருந்தார். காலை நேரத்தில் இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்த 3 வயது குழந்தையை அவர் வீட்டுக்கு அவசர அவசரமாக எடுத்து வந்தார். அந்த குழந்தை இறந்து விட்டதாக கருதிய குழந்தையின் தாய் கதறி அழுதார். குழந்தையை கையில் வாங்கிய நர்ஸ் ஸ்ரீஜா, கொரோனா தொற்று பாதிப்பால் தொடர் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கிய நிலையில் இருப்பதை புரிந்து கொண்டார்.

செயற்கை சுவாசம் அளிக்காவிட்டால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சுதாரித்துக் கொண்டு உடனடியாக செயலில் இறங்கினார்.

தாயிடம் இருந்து குழந்தையை வாங்கியவர் அக்குழந்தையின் வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்து முதல் உதவி செய்தார். இப்படி பலமுறை செய்ததால் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மெதுவாக கண் திறந்து பார்த்தது. பின்னர் குழந்தையை அதன் பெற்றோர் மற்றும் தன் கணவர் பிரமோத் உடன் அவசர சிகிச்சை அளிக்க அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்தவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

டாக்டர்கள் கூறுகையில் சரியான நேரத்தில் செயற்கை சுவாசம் அளித்ததால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடிந்ததாக கூறி நர்சுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளித்து காப்பாற்றிய நர்சு ஸ்ரீஜா கூறியதாவது:-

தாயின் தோளில் குழந்தை மயங்கிய நிலையில் இருந்த போதே அதன் நிலையை புரிந்து கொண்டேன். கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படும் தொடர் வாந்தியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டு குழந்தை மயக்க நிலையில் இருந்தது. கொஞ்சம் தாமதம் செய்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் . எனவே, எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று கருதி முதல் உதவி சிகிச்சையாக செயற்கை சுவாசம் அளித்தேன். அது மிகவும் பயனளித்தது. குழந்தையின் உயிர்தான் முக்கியம். எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் என்று கவலைப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார் .

கொரோனா தொற்று பாதித்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்த ஸ்ரீஜா தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!