மக்களுக்கு பட்டை நாமம் – ரூ.100 கோடியை மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர்!

பொதுமக்களுக்கு பட்டை நாமம் போட்டுவிட்டு ரியல் எஸ்டேட் அதிபர் சுருட்டிய ரூ.100 கோடி பணத்தை என்ன செய்தார் என்பது குறித்து விசாரிக்க அவரை போலீசார் காவலில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் நூதன விளம்பரம் ஒன்று கொடுக்கப்பட்டது. 100 நாட்களில் நீங்கள் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என்று அந்த விளம்பரத்தில் தெரிவிக்கப்பட்டது. 100 நாட்களில் அதிசயம் என்று அந்த விளம்பரத்தில் தலைப்பு போடப்பட்டு மக்களை கவர்ந்திழுக்கும் வகையில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

கோடம்பாக்கத்தில் செயல்பட்ட ‘ஏஞ்சல் டிரேடிங்’ என்ற கம்பெனி இந்த விளம்பரத்தை வெளியிட்டது. தியாகபிரகாசம் (வயது 53) என்பவர் இந்த கம்பெனியை நடத்தி வந்தார்.

100 நாட்களில் முதலீட்டு பணம் இரட்டிப்பாக தரப்படும், என்ற ஆசைவார்த்தையை நம்பி பொதுமக்கள் அந்த நிறுவனத்தில் பணத்தை முதலீட்டு தொகையாக கொண்டு கொட்டினார்கள் .மேலும் ஏராளமான ஏஜெண்டுகளையும் நியமித்து, அவர்கள் மூலம் பொதுமக்களை மூளைச்சலவை செய்து பணம் திரட்டப்பட்டது. ஏஜெண்டுகளுக்கு கமிஷன் தொகையும் தரப்பட்டது. இதனால் திட்டம் தொடங்கப்பட்ட 7 மாதங்களில் சுமார் 30 ஆயிரம் பேர் சுமார் ரூ.100 கோடியை முதலீட்டு தொகையாக கட்டினார்கள்.

பொதுமக்களிடம் வசூலித்த பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலிலும், ஷேர் மார்க்கெட்டிலும் போடப்பட்டுள்ளது என்றும், இதனால் பொதுமக்கள் தாங்கள் செலுத்திய முதலீட்டு தொகையை பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும், கண்டிப்பாக இரட்டிப்பாக திருப்பி தரப்படும் என்றும் தியாகபிரகாசம் அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார். அதை நம்பிய பொதுமக்களும் கவலைப்படாமல் இருந்தனர்.

இந்த நிலையில் தியாகபிரகாசம் திடீரென்று கம்பெனியை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டார். ரூ.100 கோடியை சுருட்டிக்கொண்டு அவர் எங்கே போனார்? என்று தெரியவில்லை. இது தொடர்பாக ஏமாந்த பொதுமக்கள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவான தியாகபிரகாசத்தை கைது செய்ய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி, உதவி கமிஷனர் சுரேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான தனிப்படை போலீசார் தியாகபிரகாசத்தை தேடி வந்தனர்.

நேற்று முன்தினம் அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர், நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுமக்களுக்கு பட்டை நாமம் போட்டுவிட்டு அவர் சுருட்டிய ரூ.100 கோடி பணத்தை அவர் என்ன செய்தார் என்பது குறித்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவரது வங்கி கணக்கில் எந்த பணமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!