குடும்பக் கட்டுப்பாடு செய்த பெண் மீண்டும் கர்ப்பம்… பின் நடந்த விபரீதம்!

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட பெண்ணுக்கு மீண்டும் உருவான சிசுவை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சையில் இன்று (ஆக.23) தாய் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி ராணி (28). இவருக்கு, 2018-ல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

ஏற்கெனவே, இவருக்கு ஒரு மகள் இருப்பதால் குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டது. புதுக்கோட்டை அருகே கைக்குறிச்சியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்த ராணிக்கு, கடந்த வாரம் வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், குழந்தை உருவாகி இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியதாகத் தெரிகிறது. இதையடுத்து, இன்று அதற்கான அறுவை சிகிச்சை செய்தபோது, எதிர்பாராத விதமாக ராணி உயிரிழந்தார். இதற்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

2018-ல் அலட்சியமாக குடும்பக் கட்டுப்பாடு செய்த மருத்துவக் குழுவினர் மற்றும் தற்போது அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ராணியின் உடலைப் பெற்றுச் செல்வோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.- source: kamadenu * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!