ஆப்கானிஸ்தானின் பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தலிபான்கள் அடக்குமுறைகளை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். வேலைக்கு செல்லும் பெண்களை பல இடங்களில் தடுத்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். ஏற்கனவே 1996 முதல் 2001 வரை தலிபான்கள் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் இருந்தது.

அப்போது பெண்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகளை அவர்கள் கையாண்டனர். பெண்கள் வெளியில் செல்லக்கூடாது, வேலைக்கு செல்லக்கூடாது. வெளியே செல்வதாக இருந்தால் குடும்ப ஆண்கள் துணைக்கு செல்ல வேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதித்து இருந்தனர். இதை மீறினால் கடும் தண்டனை வழங்கப்பட்டது.

இந்தநிலையில் இப்போது ஆட்சியை பிடித்துள்ள தலிபான்கள் அடக்குமுறைகளை மீண்டும் கையில் எடுத்துள்ளனர். வேலைக்கு செல்லும் பெண்களை பல இடங்களில் தடுத்து வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் அரசுக்கு சொந்தமான ஆர்.டி.ஏ. என்ற டி.வி. நிறுவனம் உள்ளது. இதில் செய்தி வாசிப்பாளராக சப்னம் தாரன் பணியாற்றி வந்தார். மேலும் அவர் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணியாற்றினார்.

அந்த டி.வி.யில் அவர் பிரபல நபராக இருந்தார். ஆனால் அவர் பணிக்கு வரக்கூடாது என்று தலிபான்கள் தடுத்துவிட்டனர்.

இது தொடர்பாக சப்னம் தாரன் சமூக வலைதளம் மூலமாக செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தலிபான்கள் காபூல் நகரை கைப்பற்றிய நிலையில் நானும், மற்ற ஊழியர்களும் வழக்கம் போல டி.வி. நிலையத்துக்கு சென்றோம். எங்களுடைய அடையாள அட்டைகளை வாங்கி பார்த்து விட்டு ஒவ்வொருவராக உள்ளே அனுமதித்தார்கள். ஆனால் என்னையும், வேறு சில பெண்களையும் அனுமதிக்கவில்லை.

இனி வேலைக்கு வரக்கூடாது, எல்லாவற்றிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுவிட்டது என்று கூறிவிட்டார்கள். நான் என்ன செய்வது என்று தெரியாமல் வீடு திரும்பிவிட்டேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

எனது குரலை சர்வதேச சமுதாயம் கேட்க வேண்டும். எனக்கு உதவி செய்ய வேண்டும். எனது வாழ்க்கையே இப்போது அச்சுறுத்தலில் இருக்கிறது. சர்வதேச சமுதாயம்தான் என்னை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!