ஓட்டலில் உணவு வாங்க சென்ற ரம்யா – காதலன் வெறிச்செயல்..!

மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.

ஆந்திர மாநிலம் குண்டூர் பரமைய்ய குண்டா பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராவ். இவரது மனைவி ஜோதி. தம்பதிக்கு மவுனிகா, ரம்யா (வயது 21). என 2 மகள்கள் இருந்தனர்.

இருவரும் குண்டூரில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தனர். ரம்யா பி.டெக் 3-ம் ஆண்டு படித்து வந்தார். ரம்யாவுக்கு குண்டூர் அடுத்த முட்லூர் பகுதியை சேர்ந்த சசி கிருஷ்ணா (24) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானார்.

இருவரும் தினமும் செல்போனில் பேசி பழகி வந்தனர். சசி கிருஷ்ணாவுக்கு தாய், தந்தை இல்லாததால் சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். சசி கிருஷ்ணா திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது ரம்யாவுக்கு தெரியவந்தது.

திருட்டில் ஈடுபடாதே என்று கூறி ரம்யா, சசி கிருஷ்ணாவுடன் பேசுவதை தவிர்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று ரம்யா அருகில் உள்ள ஓட்டலில் உணவு வாங்குவதற்காக சென்றார். அப்போது அங்கு பைக்கில் வந்த சசி கிருஷ்ணா, ரம்யாவிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இருவரும் பைக்கில் வெளியே சென்று வரலாம் என சசிகுமார் அழைத்தார் அதற்கு ரம்யா மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சசி கிருஷ்ணா தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரம்யாவின் மார்பு வயிறு உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த ரம்யாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பழைய குண்டூர் போலீசார் ரம்யா செல்போனை பறிமுதல் செய்து அவருடன் கடைசியாக பேசிய நபர் குறித்து தகவல் சேகரித்தனர். பின்னர் பஸ் நிலையத்தில் பதுங்கியிருந்த சசி கிருஷ்ணாவை கைது செய்தனர்.

ரம்யா குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்த ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டார்.

காதல் தகராறில் பட்டப்பகலில் என்ஜினீயரிங் மாணவி குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!