தலிபான்கள் அடிமைச் சங்கிலிகளை உடைத்துவிட்டனர் -இம்ரான் கான் சொல்கிறார்!

ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரும் மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கும் மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். நேற்று தலைநகரம் காபூலை கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிபர் அஷ்ரப் கனி மாளிகையில் இல்லை. அவர் தஜிகிஸ்தான் நாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டின் முழு கட்டுப்பாடும் தலிபான்கள் கையில் வந்ததையடுத்து, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். தலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ? என்ற பீதியில் ஏராளமான மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது பற்றி கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அடிமைச் சங்கிலிகள் உடைக்கப்படுகின்றன, என்றார்.

ஆங்கில வழிக்கல்வி மற்றும் அதைத் தொடர்ந்து கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்வதைப் பற்றி பேசிய இம்ரான் கான், “நீங்கள் மற்ற கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டு உளவியல் ரீதியாக அடிபணிந்தீர்கள். அவ்வாறு நடக்கும் போது, உண்மையான அடிமைத்தனத்தை விட மோசமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கலாச்சார அடிமைத்தனத்தின் சங்கிலிகளை தூக்கி எறிவது கடினம். ஆப்கானிஸ்தானில் இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். அவர்கள் அடிமைத்தனத்தின் சங்கிலியை உடைத்துள்ளனர்” என்றார்.

தலிபான்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கும் மனிதாபிமானத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் எதிர்காலத்தைப் பற்றி கவலை தெரிவித்தார். கடின முயற்சிக்கு பிறகு வென்றெடுத்த அவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!