காணாமல் போன வளர்ப்பு கிளியை தேடி வரும் பாசக்கார குடும்பம்!

வீட்டில் உள்ளவர்கள் என்ன சொன்னாலும் புரிந்துகொண்டு பழகியதால் இந்த கிளிக்கு அமீன் குடும்பத்தினர் கிரீனி என பெயர் வைத்து வளர்த்து வந்தனர்.

ராமநாதபுரம் கேணிக்கரை தீரன் திப்பு சுல்தான் தெருவை சேர்ந்தவர் அமீன் (வயது42). கோழிக்கடை வைத்துள்ளார். பறவைகள் ஆர்வலரான இவர் தனது வீட்டில் ஏராளமான கிளிகள் வளர்த்து வருகிறார். இவர் சென்னைக்கு சென்றபோது, 10 நாட்களே ஆன அபூர்வ பெண் கிளி ஒன்றினை ரூ.40 ஆயிரம் விலை கொடுத்து வாங்கி வந்துள்ளார்.

கிரிம்சன் பெல்லீட் கண்ணூர் என்ற வகையை சேர்ந்த இந்த கிளியை கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக வளர்த்து வந்தனர். இந்த பல வர்ண பெண் கிளி வீட்டில் அமீன் மற்றும் அவரின் மனைவி, 2 மகள்களிடம் அன்பாக பழகி வந்துள்ளது. வீட்டில் உள்ளவர்கள் என்ன சொன்னாலும் புரிந்துகொண்டு பழகியதால் இந்த கிளிக்கு அமீன் குடும்பத்தினர் கிரீனி என பெயர் வைத்து வளர்த்து வந்தனர். பல கிளிகள் வளர்த்து வந்தாலும் இந்த கிளி மீது அளவு கடந்த பாசமும், பரிவும் காட்டி வந்துள்ளனர்.

இந்தநிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வீட்டில் வழக்கம்போல காலையில் குளிப்பதற்காக கூண்டில் இருந்து திறந்துவிட்டுள்ளனர். அப்போது சுற்றித் திரிந்து விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென்று காணாமல் போனது. இதனால் பதறியடித்து அங்கும் இங்கும் தேடி கிரீனி கிளியை தேடினர். ஆனால் எங்கும் கிளி கிடைக்கவில்லை. இதனால் அமீன் குடும்பமே சோகத்தில் மூழ்கியது.

எங்காவது சென்றிருக்கும் வந்துவிடும் என்று காத்திருந்த நிலையில் 3 நாட்களாகியும் வரவில்லை. இதனால் அமீன் குடும்பத்தினர் அந்த கிளியின் படத்தை போட்டு நோட்டீசு அச்சடித்தனர். இந்த நோட்டீஸ்களை ராமநாதபுரம் நகர் முழுவதும் வீடு, வீடாக சென்று கொடுத்து கிளியை கண்டால் தகவல் தெரிவிக்குமாறு கூறி வருகின்றனர்.

அந்த நோட்டீசில் கிளியின் படம், அதன் பெயர், கிளியின் காலில் கட்டி உள்ள வளையத்தின் ஐ.டி. எண் போன்ற விவரங்களுடன் தொடர்பு எண்ணை போட்டுள்ளனர். மேலும், யாராவது அந்த கிளியை கண்டுபிடித்து ஒப்படைத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். வீட்டில் வசித்து வரும் மனிதர்கள் தொலைந்தாலே தேட மனம் வராத சமூகத்தில், பாசமாக வளர்த்த கிளியை நோட்டீசு அடித்து தேடிவரும் மனிதநேயமிக்க செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!