சேது பட பாணியில் நாகராஜன்… 20 ஆண்டுகளாக பாறையில் அமர்ந்து இருக்கிறார்!

பொன்னமராவதி அருகே காதல் தோல்வியால் மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி 20 ஆண்டுகளாக பாறையிலேயே அமர்ந்து இருக்கிறார்.

மனித வாழ்வில் காதல் மிகவும் புனிதமானது. இரு மனங்கள் இணைவதற்கு அடித்தளமாக அமையும் காதல் பலரை வாழ வைத்திருக்கிறது. பலரை வீழ்த்தியும் இருக்கிறது.

காதல் தோல்வியால் தனது வாழ்க்கையை தொலைத்தவர்கள், தற்கொலை செய்து கொண்டவர்கள் என பலர் இருப்பார்கள். ஆனால் காதல் தோல்வி காரணமாக மனநலம் பாதித்தவர்களை அரிதாகவே பார்க்க முடியும். அந்த வகையில் புதுக்கோட்டை அருகே ஒருவர் காதலி தனக்கு கிடைக்காததால் மனநோய்க்கு ஆளாகி ஊரைவிட்டு ஒதுங்கி இருக்கும் பாறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அமர்ந்து இருக்கிறார் என்றால் பரிதாபம்தானே!

அவரை பற்றிய சோகக்கதையை பார்ப்போம்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மூலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சாயி (வயது 70). இவரது மகன் நாகராஜன் (40). இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள ஒரு மளிகை கடையில் கூலிவேலை செய்து வந்தார்.

அப்போது, அவருக்கும், கேரளாவை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து நாகராஜன் அந்த பெண்ணை திருமணம் செய்வதற்காக தனது சொந்த ஊரான மூலங்குடிக்கு அழைத்து வந்தார்.

இதை அறிந்த பெண்ணின் உறவினர்கள் மூலங்குடிக்கு வந்து இரவோடு இரவாக அந்த பெண்ணை வேன் மூலம் அழைத்துச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜன் அன்று முதல் புலம்ப தொடங்கினார். தொடர்ந்து அவர் சுய சிந்தனையற்ற நிலைக்கு மாறினார். அவரது நிலையை அறிந்த அண்ணன் சேகர், அவரது தாய் நஞ்சாயி ஆகியோர் நாகராஜனை பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்து விட்டு நாகராஜனுக்கு மனநலம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.

இதையடுத்து நாகராஜன் மன விரக்தியில் மூலங்குடி பகுதியிலுள்ள தெய்னி கண்மாய் பகுதியில் உள்ள ஒரு பாறையில் உட்கார ஆரம்பித்தார். அன்று முதல் இன்று வரை அந்த பாறையில் உட்கார்ந்த நிலையிலேயே உள்ளார். ஊர்க்காரர்கள், உறவினர்கள் அவரை அழைத்து பார்த்தபோது அவர் வராமல் அதே இடத்தில் இருக்கிறார்.

தினமும் அவரது தாய் நஞ்சாயி உணவினை பாறைக்கு எடுத்து சென்று மகனுக்கு வழங்கி வருகிறார். நஞ்சாயி 100 நாள் வேலைக்கு சென்று தனது மகனை காப்பாற்றி வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:-

வீட்டில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்து இருக்கும் மகனை தினமும் சந்தித்து அவருக்கு மூன்று வேளையும் உணவு வழங்கி வருகிறேன். தற்போது, வயது முதிர்வுகாரணமாக என்னால் வேலைக்கு செல்ல முடியாததால் மகனை கவனிக்க முடியவில்லை. எனவே எனது மகன் நாகராஜனை கவனிக்க அரசு உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

எங்கே செல்லும் இந்த பாதை… என்ற நிலையில் மனநலம் பாதித்த நாகராஜன் பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த சேது என்ற படத்தை நினைவூட்டுவதாக அந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!