வாலிபரின் நுரையீரலில் சிக்கி இருந்த பேனா மூடி… 18 ஆண்டுகளின் பின் மீட்பு..!

கடந்த 18 ஆண்டுகளாக மூச்சு திணறல் மற்றும் இருமலால் அவதிப்பட்டு வந்த வாலிபரின் நுரையீரலில் இருந்த பேனா மூடி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

கேரள மாநிலம் கொச்சி அருகே ஆலுவா பகுதியை சேர்ந்தவர் சூரஜ் (வயது 32).

சூரஜ்க்கு பல ஆண்டுகளாக மூச்சு திணறல் இருந்து வந்தது. அதோடு இருமலாலும் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றார். ஆனால் நோயில் இருந்து பூரண குணமடையவில்லை.

இந்த நிலையில் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவரது நுரையீரலை ஸ்கேன் செய்து பார்த்தனர்.

இதில் சூரஜின் நுரையீரல் பகுதியில் ஒரு சிறிய பொருள் இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். அந்த பொருளை அகற்ற, சூரஜிக்கு ஆபரேசன் செய்ய முடிவு செய்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் சிறப்பு பிரிவு டாக்டர்கள் மற்றும் இதயநோய் நிபுணர்கள் அவருக்கு ஆபரேசன் செய்தனர். அப்போது வாலிபர் சூரஜின் நுரையீரலில் ஒரு பேனா மூடி இருந்ததை கண்டுபிடித்தனர்.

அந்த பேனா மூடியை டாக்டர்கள் ஆபரேசன் செய்து அகற்றினர். தற்போது வாலிபர் சூரஜ், உடல்நலம் தேறி வருகிறார். இது குறித்து டாக்டர்கள் கூறும்போது, சூரஜ் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது அடிக்கடி பேனா மூடியை வைத்து விசில் அடிப்பார்.

ஒருமுறை இதுபோல் விசில் அடித்த போது பேனா மூடியை விழுங்கி விட்டார். உடனே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவரை பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த போது எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிவிட்டனர். ஆனால் அதன்பின்பு சூரஜ் அடிக்கடி சுவாச பிரச்சனை மற்றும் இருமலால் அவதிப்பட்டார். அதற்கு மட்டும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இப்போதுதான் அவரது நுரையீரலில் பேனா மூடி சிக்கி இருந்தது தெரியவந்தது. 18 ஆண்டுகளுக்கு பிறகு அந்த பேனா மூடி அகற்றப்பட்டு உள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!