தள்ளாத வயதிலும் இட்லி விற்பனை செய்யும் 90 வயது மூதாட்டி!

சாத்தான்குளம் அருகே தள்ளாத வயதிலும் உழைத்து உண்ண வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த மூதாட்டி கிராமம் கிராமமாக பல கிலோ மீட்டர் நடந்து சென்று மலிவு விலையில் இட்லி விற்பனை செய்து வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தோப்புவளம் கிராமத்தை சேர்ந்தவர் உச்சிமாகாளி (வயது 90).

இவர் அப்பகுதியில் சுமார் 25 ஆண்டு காலமாக மலிவு விலையில் இட்லி விற்பனை செய்து வருகிறார். இதற்காக அவர் ஆட்டு உரலில் உளுந்து மற்றும் அரிசியை வைத்து இட்லி மாவு அரைத்து அதனை பக்குவப்படுத்தி பழங்கால முறைப்படி வீட்டில் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிறார்.

பின்னர் அவர் அதிகாலை 4 மணிக்கே எழுந்து இட்லி, சட்னி, சாம்பார் ஆகியவற்றை விறகு அடுப்பில் தயார் செய்து அதனை பாத்திரத்தில் எடுத்து தோப்புவளம், கந்தசாமிபுரம், காலன்குடியிருப்பு, தளவாய்புரம் உள்ளிட்ட கிராமங்களுக்கு நடந்து சென்று விற்பனை செய்து வருகிறார்.

இட்லி ஒன்று பல வருடங்களாக ரூ.1, 2-க்கு விற்பனை செய்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலைவாசி உயர்வின் காரணமாக இட்லி ஒன்று ரூ.3-க்கு தற்போது விற்பனை செய்து வருகிறார்.

இவரது இட்லிக்காக காத்திருக்கும் ரசிகர்கள் கூட்டம் உண்டு. உச்சிமாகாளி வரும் வரை வீட்டின் வாசலில் பாத்திரத்தோடு காத்திருந்து மலிவு விலைக்கு இட்லி கிடைப்பதால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாங்கி சாப்பிடுகின்றனர்.

தள்ளாத வயதிலும் உழைத்து உண்ண வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த மூதாட்டி கிராமம் கிராமமாக பல கிலோ மீட்டர் நடந்து சென்று மலிவு விலையில் இட்லி விற்பனை செய்து வருகிறார்.

இவரது மகன் திசையன்விளையில் வசித்து வருவதாகவும், அவர் எத்தனையோ முறை தனது குடும்பத்தினருடன் வந்து வீட்டில் ஓய்வு எடுக்குமாறு அழைத்தும் செல்லாமல் தினமும் உழைத்து, உழைத்து பழகிய மூதாட்டி தான் தோப்புவளத்திலேயே இருக்கிறேன் எனவும் மகனிடம் கூறி உள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!