தண்ணீர் வாளியில் விழுந்த 8 மாத குழந்தைக்கு நடந்த சோகம்!

மண்டியாவில் தண்ணீர் வாளியில் தவறி விழுந்து 8 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

8 மாத குழந்தை

மண்டியா தாலுகா மரகாடு தொட்டி அருகே ஜெயராம் ேல-அவுட்டை சேர்ந்தவர் கிரண். இவருடைய மனைவி சுவர்ணா. இந்த தம்பதிக்கு 8 மாதத்தில் ஆண் குழந்தை இருந்தது. இவர்கள் ஹலஹள்ளி குடிசை பகுதியில் வசித்து வந்தனர். ஆனால் புனரமைப்புக்காக ஹலஹள்ளி பகுதியில் உள்ள குடிசைகளை அரசு அகற்றியது.

இதனால், அங்கிருந்தவர்களுக்கு ஜெயராம் லே-அவுட்டில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று கிரண் வெளியே சென்றிருந்தார். சுவர்ணா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். இதனால் 8 மாத குழந்தை வீட்டின் வாசலில் விளையாடி கொண்டிருந்தது.

வாளியில் மூழ்கி சாவு

அப்போது வீடு சுத்தம் செய்து கொண்டிருந்த சுவர்ணா, வாளியில் தண்ணீர் பிடித்து வெளியே வைத்திருந்தார். அந்த சமயத்தில் வாசலில் விளையாடி கொண்டிருந்த குழந்தை, தண்ணீர் வாளிக்குள் தவறி விழுந்தது. இதனால் தண்ணீரில் மூழ்கி அந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனை சுவர்ணா கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனால் சிறிது நேரத்தில் அந்த குழந்தை மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது.

இந்த நிலையில் வாளியில் உள்ள தண்ணீரை எடுக்க சுவர்ணா வெளியே வந்தார். அப்போது வாளிக்குள் குழந்தை பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கதறி அழுதார்.

சோகம்

இதுபற்றிய தகவல் அறிந்ததும் மண்டியா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மண்டியா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!