நிர்வாக சேவை தேர்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் சாதனை!

ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 சகோதரிகள் சாதனை செய்து உள்ளனர்.

ராஜஸ்தான் பொது சேவை ஆணையம் (ஆர்.பி.எஸ்.சி) ராஜஸ்தான் நிர்வாக சேவை (ஆர்ஏஎஸ்) 2018 தேர்வு இறுதி முடிவை நேற்று வெளியிட்டது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணல்கள் நடத்தப்பட்ட பின்னர் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது. தகுதி பட்டியல் அதிகாரப்பூர்வ (rpsc.rajasthan.gov.in) இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த முக்தா ராவ் முதலிடத்தையும், டோங்கைச் சேர்ந்த மன்மோகன் சர்மா இரண்டாம் இடத்தையும், ஜெய்ப்பூரைச் சேர்ந்த சிவாட்சி கண்டால் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். மொத்தம் 2023 பேர் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர், அவர்கள் இப்போது மாநிலத்தின் பல்வேறு துறைகளில் நியமிக்கப்படுவார்கள்.

முதலிடம் பிடித்தவர்களுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இந்த தேர்வில் ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீ சஹ்தேவ் சஹாரனின் மூன்று மகள்கள் வெற்றி பெற்று உள்ளனர். ஸ்ரீ சஹ்தேவ் சஹாரனுக்கு 5 மகள்கள் அதில் ஏற்கனவே ரோமா மற்றும் மஞ்சு ராஜஸ்தான் நிர்வாக சேவை தேர்வில் வெற்றிபெற்று பணியில் உள்ளனர். தற்போது மற்ற அன்ஷு, ரீது மற்றும் சுமன் 3 மகள்களும் இதே தேர்வில் வெற்றி பெற்று உள்ளனர்.

இதுகுறித்து பர்வீன் கஸ்வான் டுவீட் செய்துள்ளார். அதில்

“இது ஒரு நல்ல செய்தி. அன்ஷு, ரீது மற்றும் சுமன் ஆகியோர் ராஜஸ்தானின் ஹனுமன்கர் பகுதியைச் சேர்ந்த மூன்று சகோதரிகள். இன்று மூவரும் ஒன்றாக ஆர்.ஏ.எஸ். இல் தேர்வு செய்யப்பட்டனர். விவசாயி ஸ்ரீ சஹ்தேவ் சஹாரனின் மகள்கள் இப்போது ஆர்ஏஎஸ் அதிகாரிகள் “என்று டுவீட் செய்துள்ளார்.

இந்த டுவீட் 5,000 க்கும் மேற்பட்ட லைக்குகளைப் பெற்றுள்ளது மற்றும் பலர் சகோதரிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!