பெண்ணிடம் பணப்பை பறிப்பு… ஏ.டி.எம். கார்டுகளை திருப்பி கொடுத்த விசித்திர திருடன்!

திருச்சியில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் பணப்பை பறிக்கப்பட்டது. செல்போனில் கெஞ்சியதால் ஏ.டி.எம். கார்டுகளை திருடிய நபரே திருப்பி கொடுத்த ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.

திருச்சியில் மொபட்டில் சென்ற பெண்ணிடம் பணப்பை பறிக்கப்பட்டது. செல்போனில் கெஞ்சியதால் ஏ.டி.எம். கார்டுகளை திருடிய நபரே திருப்பி கொடுத்த ருசிகர சம்பவம் அரங்கேறி உள்ளது.

பெண்ணிடம் பணப்பை பறிப்பு

திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மாசாலையை சேர்ந்தவர் புஷ்பராஜ் மனைவி இளஞ்சியம் (வயது 54). இவருடைய மகளுக்கு திருமணமாகி குஜராத்தில் கணவருடன் வசித்து வருகிறார். குஜராத்தில் இருந்து சமீபத்தில் இளஞ்சியத்தின் மகள் வந்தார்.

இவர் திருச்சி எடமலைப்பட்டிபுதூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தோழியை பார்ப்பதற்காக ஸ்ரீரங்கத்தில் இருந்து தாய் இளஞ்சியத்துடன் மொபட்டில் கடந்த 11-ந் தேதி இரவு 7 மணிக்கு வந்தார். கிராப்பட்டி ரெயில்வே பாலத்தில் சென்றபோது, இளஞ்சியம் வைத்திருந்த கைப்பையை மோட்டார் சைக்கிளில் சென்ற மர்மநபர் பறித்துவிட்டு தப்பினார்.

செல்போனில் பேசினர்

இதையடுத்து பஞ்சப்பூர் பிரிவு சாலை வரை மர்மநபரை விரட்டி சென்றனர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. கைப்பையில் ரூ.15 ஆயிரமும், செல்போன் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் இருந்தன. இதையடுத்து எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசாரும் திருட்டு போன பொருட்களின் விவரங்கள் மற்றும் முகவரியை வாங்கி கொண்டு காலையில் வரும்படி கூறி அனுப்பினர். இதையடுத்து திருட்டுபோன செல்போன் எண்ணுக்கு இளஞ்சியம் போன் செய்தார். எதிர்முனையில் செல்போன் அழைப்பை எடுத்து மர்மநபர் பேசினார்.
அப்போது தங்களது செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டை திருப்பி கொடுக்குமாறு இளஞ்சியம் மற்றும் அவரது மகளும் கெஞ்சி கேட்டனர். இதில் மனமிறங்கிய அந்த நபர் கைப்பையை திருப்பி தருவதாக கூறினார்.

திருப்பிக்கொடுத்த திருடன்

இதனால் இளஞ்சியம் தனது தம்பியை வரவழைத்து நடந்த சம்பவத்தை கூறினார். இதையடுத்து அந்த செல்போன் எண்ணுக்கு இளஞ்சியத்தின் தம்பி பேசினார். அப்போது திருச்சி-சென்னை பைபாஸ்ரோடு பால்பண்ணைரோட்டில் உள்ள கார் ஷோரூம் அருகே வருமாறு மர்ம நபர் கூறினார்.

அதன்படி இரவு 9 மணி அளவில் அங்கு சென்று சில அடி தூரத்தில் நின்ற மர்மநபருக்கு இளஞ்சியம் தம்பி போன் செய்தார். அப்போது கைப்பையை தூக்கி வீசிவிட்டு மர்மநபர் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பினார். கைப்பையை திறந்து பார்த்தபோது, அதில் ரூ.15 ஆயிரம் ரொக்கம் மட்டும் திருடப்பட்டு இருந்தது. செல்போன் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் அப்படியே இருந்தன.

இதற்கிடையே இளஞ்சியத்துக்கு போன் செய்த போலீசார் கைப்பை திருட்டு போனது குறித்து புகார் அளிக்க வரும்படி கூறினர். அப்போது தங்களுடைய கைப்பை கிடைத்துவிட்டதாகவும், அதனால் புகார் கொடுக்கவில்லை என்று போலீசாரிடம் இளஞ்சியம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!