பிரபல திரைப்பட இயக்குனர் சொர்ணம் காலமானார் – மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மறைந்த இயக்குனர் சொர்ணம் உடலுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.


பிரபல திரைப்பட இயக்குனர் சொர்ணம், இவர் சென்னை கொட்டிவாக்கத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வயது மூப்பு காரணமாக சொர்ணத்துக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 88. மரணம் அடைந்த சொர்ணம் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி கதை எழுதிய ஒரே ரத்தம் படத்தை இயக்கி பிரபலமானார். தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படத்தின் மூலம் தான் நடிகராக அறிமுகமானார்.

மேலும் சிவகுமார், கமல்ஹாசன் நடித்த தங்கத்திலே வைரம், முத்துராமன் நடித்த சீர்வரிசை, ஜெய்சங்கர் நடித்த ஆசை மனைவி, நீ ஒரு மகராணி போன்ற படங்களையும் இயக்கி உள்ளார் சொர்ணம்.

இதுதவிர, எம்.ஜி.ஆர். நடித்த தாயின் மடியில், நம்நாடு, கலங்கரை விளக்கம், குடியிருந்த கோயில், ஒளிவிளக்கு, என் அண்ணன், குமரி கோட்டம், இதயவீணை, ராமன் தேடிய சீதை, பட்டிக்காட்டு பொன்னையா உள்ளிட்ட 11 படங்களுக்கு வசனம் எழுதி உள்ளார்.

மறைந்த இயக்குனர் சொர்ணம் உடலுக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். சொர்ணத்தின் குடும்பத்தினருக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அப்போது அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் உடன் இருந்தார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!