நடுக்காட்டில் மடிக்கணினியுடன் அமர்ந்து வேலை பார்க்கும் இளம்பெண்!

நகர்ப்புறங்களை மட்டுமே வளர்ச்சி அடைய வைக்கும் அரசியல் தலைவர்கள், இனி கிராமப்புறங்களையும் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்குஅமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீடுகளில் இருந்தே வேலை பார்க்கும்படி கூறியுள்ளது. இதன்காரணமாக கம்ப்யூட்டர் என்ஜினீயர்கள் உள்பட ஏராளமானோர் தங்களது வீடுகளில் இருந்தே ஆன்லைன் மூலம் வேலை பார்த்து வருகிறார்கள். இதற்கு ஒரு மடிக்கணினியும், இணையதள வசதியும் இருந்தால் போதும். ஆன்லைன் மூலமாக உலகின் எந்தவொரு மூலையில் இருந்தும் வேலை பார்க்கும் வசதி வந்துவிட்டது.

ஆனால் இணையதள வசதி என்பது அனைத்து இடங்களிலும் கிடைப்பதில்லை. பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் 4-ஜி வசதியில் இருந்து இப்போது பலரும் 5-ஜி வசதிக்கு மாறி வருகிறார்கள். ஆனால் மற்ற இடங்களில் செல்போனில் சிக்னல் கிடைப்பதும், இணையதள வசதி கிடைப்பதும் பெரும் சவாலாக உள்ளது.

சிவமொக்கா மாவட்டம் ஒசநகர் தாலுகா வாரம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிந்து. பி.காம் பட்டதாரியான இவர் பெங்களூருவில் ஒரு ஆடிட்டரிடம் வேலை பார்த்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கால் இவர் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் பெங்களூருவில் இருந்து தனது சொந்த கிராமத்துக்கு வந்துவிட்டார்.

கடந்த சில நாட்களாகவே அவர் தனது வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்தார். அவர் தனது செல்போன் மூலம் மடிக்கணினிக்கு இணையதள வசதியை ஏற்படுத்தி வேலை பார்த்து வந்தார். ஆனால் அவருக்கு சரியாக செல்போன் சிக்னல் கிடைக்கவில்லை. இதனால் அவரால் குறிப்பிட்ட நேரத்தில் தனது வேலையை முடிக்க முடியாமல் அவதி அடைந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் தனது கிராமத்தையொட்டிய காட்டுப்பகுதிக்கு வந்து அங்கு செல்போன் சிக்னலும், இணையதள வசதியும் கிடைக்கிறதா என்று பார்த்தார். அந்த பகுதியில் சிக்னல் கிடைத்தது. இதையடுத்து அவர் அங்கேயே ஒரு கூடாரம் அமைத்து மடிக்கணினியுடன் அமர்ந்து வேலை பார்த்தார். இதைப்பார்த்த பலரும் நகர்ப்புறங்களை மட்டுமே வளர்ச்சி அடைய வைக்கும் அரசியல் தலைவர்கள், இனி கிராமப்புறங்களையும் கண்காணிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!