சாம்பார் வைக்க வேண்டிய குக்கரில் சாராயம் காய்ச்சிய தம்பதி!

கோவிந்தசாமி தனது வீட்டில் சமையலறையிலேயே கியாஸ் அடுப்பு கொண்டு குக்கரில் கள்ள சாராயம் காய்ச்சி வந்ததும், காலியாக உள்ள இடத்தில் பேரல்களில் சாராய ஊறல்கள் வைத்திருப்பது தெரியவந்தது.

கொரோனா முழு ஊடங்கால் டாஸ்மாக் மது கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் கள்ளசாராயத்தை கடத்தி வந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.

இதை தடுக்க மதுவிலக்கு போலீசாருக்கு எஸ்.பி. விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் ஒரு வாரத்துக்கும் மேலாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் திருப்பத்தூர் அடுத்த செல்லரப்பட்டு கிராமத்தில் கள்ளசாராய விற்பனை அமோகமாக நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கந்திலி போலீசார் அங்கு திடீர் சோதனை செய்தனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி (வயது 33) என்பவர் தனது வீட்டிலேயே சாராயம் காய்ச்சி அதை பாக்கெட்டுகளில் அடைத்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக சப்ளை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் டி.எஸ்.பி. பிரவீன்குமார் தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் அங்கு சோதனையிட்டனர்.

கோவிந்தசாமி தனது வீட்டில் சமையலறையிலேயே கியாஸ் அடுப்பு கொண்டு குக்கரில் கள்ள சாராயம் காய்ச்சி வந்ததும், காலியாக உள்ள இடத்தில் பேரல்களில் சாராய ஊறல்கள் வைத்திருப்பது தெரியவந்தது.

அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 250 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.

இதற்கு உடந்தையாக கோவிந்தசாமி மனைவி வள்ளியும் (30) ஈடுபட்டுள்ளார். இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

சாம்பார் வைக்க வேண்டிய குக்கரில் சாராயம் காய்ச்சியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வாணியம்பாடியில் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட சரக்குகளை வாட்ஸ்-அப் குரூப் மூலம் விற்பனை செய்து வந்ததாக 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!