கொழும்பு போர்ட் சிட்டி மூலம் ஸ்ரீலங்காவை சீனலங்காவாக மாற்றும் ராஜபக்சே அரசு..!

இலங்கை பாராளுமன்றம் கொழும்பு போர்ட் சிட்டி துறைமுக நகர பொருளாதார ஆணைய மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது கடலில் செயற்கையாக உருவாக்கபப்ட்டுள்ள 269 ஹெக்டேர் நிலத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்து, கொழும்பு நகரத்துடன் இணைத்துள்ளது.

இந்த மசோதா கடந்த வாரம் வியாழக்கிழமை இலங்கை பாராளுமன்றத்தில் 149 வாக்குகள் ஆதரவுடனும், 58 எதிர்ப்பு வாக்குகளுடனும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கை அரசு நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தின் கீழ், கொழும்பு துறைமுக நகரம் எனும் சிறப்பு பொருளாதார மண்டலத்தை நிர்வகிக்க ஜனாதிபதியால் புதிதாக ஒரு ஆணையம் நிறுவப்படும்.

துறைமுக நகருக்குள் இலங்கை பணம் மட்டுமல்லாது அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு வெளிநாட்டு பணத்தை பயன்படுத்தியும் வணிகம் செய்யலாம் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த விதி, மறைமுகமாக துறைமுக நகரம் எனும் பெயரில் சீனா தனது கரன்சியை பயன்படுத்தி வியாபாரம் செய்துகொள்ள ஏதுவாக உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, போர்ட் சிட்டி மசோதா ஏப்ரல் 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், அதை எதிர்த்து 19 மனுக்கள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை வெளியானது. நாட்டின் அரசியலமைப்பை உறுதிப்படுத்த முக்கிய உட்பிரிவுகள் திருத்தப்பட்டால் மசோதாவை நிறைவேற்ற முடியும் என்று அது கூறியது.

இதையடுத்து புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் பாராளுமன்ற விவாதங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு ஏற்ப திருத்தப்பட்ட மசோதாவுக்கு பெரும்பான்மையான எம்பிக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

முதல் ஐந்து ஆண்டுகளில் போர்ட் சிட்டி திட்டம் 2,00,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்சே கடந்த வாரம் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதில் பெரும்பான்மையான வேலைவாய்ப்பு இலங்கை நாட்டினருக்கு செல்லும் என அவர் கூறியுள்ளார்.

போர்ட் சிட்டி மசோதா முதலீட்டை ஈர்க்க ஒரு போட்டி கட்டமைப்பை வழங்குகிறது என்று அவர் கூறினார்.

போர்ட் சிட்டி கொழும்பு விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குனர் யமுனா ஜெயரத்ன கூறுகையில், ஹாங்காங் மற்றும் துபாய் போன்ற நிறுவப்பட்ட மற்றும் முதிர்ந்த சேவை மையங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை ஏற்கனவே வணிகச் செலவில் பல நன்மைகளைப் பெற்றுள்ளது என்றார்.

கொழும்பு தெற்காசியாவில் ஒரு முக்கிய நிதி மற்றும் சேவை மையமாக மாற திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, சீட்ரேட்- மேரிடைம்.காமின் அறிக்கையின்படி, ‘சீனா இப்போது இலங்கையில் வேரூன்றி உள்ள பகுதி இந்தியாவின் கன்னியாகுமரியிலிருந்து 290 கி.மீ தூரத்தில் உள்ளது. ஹம்பந்தோட்டாவை ஏற்கனவே சீனா 99 ஆண்டு குத்தகை எனும் பெயரில் கைப்பற்றிவிட்டது. கொழும்பு போர்ட் சிட்டி மற்றும் ஹம்பாந்தோட்டாவிற்கும் சீனா தனி பாஸ்போர்ட்டை தயார் செய்து வருகிறது.’ எனத் தெரிவித்துள்ளது.

இலங்கை நாட்டினர் சுதந்திரமாக செல்ல முடியாத வகையில், தனி பாஸ்போர்ட் வெளியிடுவதன் மூலம், இந்த பகுதிகள் இலங்கையில் இருந்து பிரிக்கப்பட்டு சீன இறையாண்மைக்கு கட்டுப்பட்ட பகுதியாக இலங்கை அரசு தாரை வார்ப்பதாக பேசப்படுகிறது. இருப்பினும், இலங்கை அரசாங்கம் இதுவரை தனி பாஸ்போர்ட் குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் கொடுக்கவில்லை.- source: news360 * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!