இந்தோனேசிய அதிபரிடம் வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கு உதவ வேண்டுமென சம்பந்தன் கோரிக்கை…!


போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கு இந்தோனேசியா உதவ வேண்டும் என்று, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டு நாட்கள் பயணமாக கொழும்பு வந்த இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, நேற்று மாலை இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இதன்போது, கருத்து வெளியிட்ட இரா.சம்பந்தன், “ஆயுதப் போரினால் பிராந்தியத்தின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், சிறிலங்கா வெகு தொலைவில் உள்ளது.

சிறிலங்காவின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அனைத்துலக ஆதரவு தேவை. குறிப்பாக வடக்கு கிழக்கில் சிறப்பு கவனிப்பு தேவைப்படுகிறது. வடக்கு கிழக்கில் இளைஞர்களின் வேலையின்மை பிரச்சினை பொருத்தமான முதலீட்டுத் திட்டங்களின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்.

எனவே, வடக்கு, கிழக்கில் இந்தோனேசியாவின் முதலீடுகளை அதிபர் உறுதிப்படுத்த வேண்டும். வடக்கு கிழக்கிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பொருளாதார உதவிகளை இந்தோனேசியா வழங்க வேண்டும். என்றும் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்குப் பதிலளித்த இந்தோனேசிய அதிபர், தம்முடன் வந்துள்ள முக்கியமான வர்த்தக பிரதிநிதிகள் சிறிலங்காவில் முதலீடு செய்ய விடுப்பம் கொண்டுள்ளதாகவும், சிறிலங்காவுடன் பொருளாதார உறவுகளை பேணிக் கொண்வதில் தமது நாடு மிக ஆர்வமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் தொடர்பாக விளக்கமளித்த இரா.சம்பந்தன், ஒன்றுபட்ட, பிரிக்கப்படமுடியாத நாட்டுக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

புதிய அரசியலமைப்பின் மூலம் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. போரினால் 50 வீதமான தமிழ் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்களில் கணிசமானளவு நிபுணத்துவம் வாய்ந்தவர்களும் அடங்கியுள்ளனர்.

எதிர்காலத்தில் இதுபோன்று நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பின் மூலம் நிலையான தீர்வு காணப்பட வேண்டியது முக்கியம்.” என்று குறிப்பிட்டார். இதற்கு இந்தோனேசிய அதிபர், சிறிலங்காவின் தேசிய கட்டுமானம் மற்றும் பொருளாதார மற்றும் ஆற்றலைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு தமது நாடு உதவும் என்று தெரிவித்துள்ளார். – Source: puthinappalakai.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/ahYcjH