சீனாவில் திடீரென குலுங்கியதால் மூடப்பட்ட வானுயர கட்டிடம்..!

வானுயர கட்டிடம் குலுங்கியதையடுத்து அமெரிக்கா தனது நாட்டு மக்களை அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியது.

சீனாவின் ஷென்ஜென் நகரில் 356 மீட்டர் உயரத்தில் 71 தளங்களைக் கொண்ட வானுயர வர்த்தக கட்டிடம் உள்ளது. ஷென்ஜென் எலக்ட்ரானிக்ஸ் குரூப் கம்பெனிக்கு சொந்தமான அந்த கட்டிடத்தில் ஏராளமான எலக்ட்ரானிக் கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

இந்த கட்டிடம் கடந்த செவ்வாய்க்கிழமையன்று திடீரென குலுங்கியது. பூகம்பம் ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் எழுந்தது. பீதியடைந்த ஊழியர்கள் அனைவரும் அவசரம் அவசரமாக கட்டிடத்தை விட்டு வெளியேறினர். அருகில் உள்ள கட்டிடங்களில் இருந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு உதவி செய்தன. மேலும், அந்த பகுதியில் வெளிநபர்கள் வராதபடி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டிடத்திற்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர். அதேசமயம், கட்டிடம் குலுங்கியதற்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், 71 மாடி கட்டிடம் மூடப்பட்டது. அதில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கப்படவில்லை. ஆனால் அருகில் உள்ள கட்டிடங்களில் கடைகள் வழக்கம்போல் செயல்படுகின்றன.

பாதுகாப்பு அபாயம் தொடர்பான போதுமான தகவல் இல்லாததால், அமெரிக்கா தனது நாட்டு மக்களை அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த கட்டிடத்தில் மீண்டும் பணியாற்ற செல்வதற்கு ஊழியர்கள் தயங்குகின்றனர். கட்டிடத்தின் பாதுகாப்பு குறித்து முழுமையான மற்றும் சரியான அறிக்கை வெளியானால் மட்டுமே ஊழியர்கள் அச்சமின்றி அங்கு செல்வார்கள். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!