ஒடிசாவில் மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி வேண்டி போராட்டம்…!


ஒடிசாவில் சீருடை அணிந்தவர்களால் கற்பழிப்பிற்கு ஆளான மாணவி தற்கொலை விவகாரத்தில் நீதி வேண்டி நடந்த முழு அடைப்பு போராட்டம் மாநிலத்தின் இயல்பு வாழ்க்கையை பாதித்தது.

ஒடிசாவில் கோரபுத் மாவட்டத்தில் மூசாகுடா கிராமத்தில் வசித்து வந்த 11ம் வகுப்பு மாணவி, வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த தன்னை சீருடையில் இருந்த 4 பேர் கற்பழித்தனர் என கடந்த வருடம் அக்டோபர் 10ந்தேதி குற்றச்சாட்டு கூறினார்.

ஆனால் மாநில போலீசார் வெளியிட்ட அறிக்கையில், அந்த சிறுமி கற்பழிக்கப்படவில்லை என தெரிவித்தனர். ஒடிசா காவல் துறையின் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பும் இதே தகவலை ஒடிசா மனித உரிமைகள் ஆணையத்திற்கு தெரிவித்தது.

ஆனால் அந்த சிறுமி தொடர்ந்து தனது குற்றச்சாட்டில் உறுதியை வெளிப்படுத்தினாள். இந்த நிலையில் நேற்று முன்தினம், சிறுமியின் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாத நிலையில் சிறுமி தூக்கு போட்டு கொண்டுள்ளார்.

அதன்பின் சிறுமியை மீட்டு உள்ளூர் சுகாதார மையத்திற்கு சுயநினைவற்ற நிலையில் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

கற்பழிப்பு புகார் அளித்த இரு வாரங்களில், ஒடிசா டி.ஜி.பி. உள்ளிட்ட மூத்த காவல் துறை அதிகாரிகள் வழக்கை வாபஸ் பெற வற்புறுத்தினர் என சிறுமி குற்றச்சாட்டு கூறினார். போலீஸ் உயரதிகாரி இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் இந்த விவகாரத்தில் நீதி வேண்டி இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர்.

இதனால் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், சந்தைகள், அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகள் மூடப்பட்டன. மாநிலம் முழுவதும் வாகன இயக்கமும் பாதிக்கப்பட்டது.

ரெயில் போராட்டத்தினால் புவனேஸ்வர், சம்பல்பூர் மற்றும் பத்ரக் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல ரெயில்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அதிக அளவில் பாதிப்படைந்தனர்.

வன்முறைக்கு பயந்து பேருந்து இயக்கமும் நிறுத்தப்பட்டன. மாணவர்களின் பாதகாப்பினை முன்னிட்டு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.

போலீசாரின் தடையை உடைத்து மாநில தலைமை செயலகத்திற்கு முன்னேற முயன்ற காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினர் என 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் முழு அளவில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் நடந்து 100 நாட்கள் கடந்த நிலையில் சிறுமி தற்கொலை முடிவை எடுத்துள்ளார். போலீசார் மற்றும் மருத்துவர்கள் உள்பட பிற அதிகாரிகள் சிறுமிக்கு மனஉளைச்சல் தந்து கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர் என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஹரிசந்தன் கூறியுள்ளார்.

போலீசார் மற்றும் அதன் மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பும் சிறுமி கற்பழிக்கப்படவில்லை என கூறியுள்ளனர். சிறுமிக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என பாரதீய ஜனதா தலைவர் பிரித்விராஜ் கூறியுள்ளார். – Source: dailythanthi.

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05