மாலத்தீவில் கொரோனாவுக்கு பயந்து இந்திய தொழிலதிபர்கள் தஞ்சம்!

இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்களும் மாலத்தீவில் தங்கி உள்ளனர். இதன் காரணமாக மாலத்தீவில் திடீரென கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் யாரையும் விட்டு வைக்கவில்லை. ஏழை, பணக்காரர் என அனைவரையும் தாக்கி வருகிறது. எவ்வளவுதான் பாதுகாப்பாக இருந்தாலும் ஏதோ ஒருவகையில் தொற்றி விடுகிறது.

இதனால் தொழிலதிபர்களும், பிரபலங்களும் கூட உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. எனவே நம்மையும் தொற்றிவிடுமோ என்று பயந்த தொழிலதிபர்கள் பலர் இப்போது மாலத்தீவில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.

இதேபோல பாலிவுட் சினிமா பட உலகத்தை சேர்ந்த பலரும் மாலத்தீவில் தங்கி இருக்கிறார்கள். மாலத்தீவு நூற்றுக்கணக்கான தீவு கூட்டங்களை கொண்டதாகும்.

ஒவ்வொரு தீவிலும் சுற்றுலா விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு அறை எடுத்து அவர்கள் தங்கி இருக்கிறார்கள்.

இவ்வாறு இலங்கை உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்களும் மாலத்தீவில் தங்கி உள்ளனர். இதன் காரணமாக மாலத்தீவில் திடீரென நோய் பாதிப்பு அதிகரித்து உள்ளது.

ஏப்ரல் மாதம் மத்தியில் 100 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் திடீரென அது உயர்ந்து 1,522 ஆக ஆனது. எனவே மாலத்தீவு தற்போது இந்தியா, நேபாளம், பூடான், வங்காள தேசம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் மாலத்தீவுக்கு வர தடை விதித்துள்ளது.

இதனால் புதிதாக தொழிலதிபர்களால் மாலத்தீவுக்கு செல்ல முடியவில்லை. அதே நேரத்தில் ஏற்கனவே சென்றவர்கள் தொடர்ந்து மாலத்தீவிலே தங்கி இருக்கலாம் என்று அறிவித்து உள்ளனர். இதனால் அவர்கள் நிம்மதியாக அங்கு தங்கி இருக்கிறார்கள்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!